கோத்தபய அதிகாரத்தை பறிக்க விரைவில் 21வது சட்ட திருத்தம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

கொழும்பு: இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற, அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்து, மக்கள் கொந்தளித்து உள்ளனர். அவர்களின் போராட்டத்தால், கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவானார்.

அதே நேரம், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரத்தையும் குறைக்கும்படி  அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தன்னையும் பதவியில் இருந்து தூக்கி வீசி விடக்கூடாது என்பதற்காக, இதற்கு கோத்தபய சம்மதித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 20ஏ.வின்படி, அதிபருக்கு தற்போது வானளாவிய அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்வதற்காகவே, 21வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக, நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சித் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ் தேசிய கூட்டணி மட்டும் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதில் புதிய அம்சங்களை சேர்ப்பது பற்றியும், தீர்மானத்தை நிறைவேற்றும் தேதியை முடிவு செய்வது பற்றியும் ஜூன் 3ம் தேதி மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்பட  இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். அன்றைய தினம், இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டணியும் கலந்து கொள்ள இருப்பதாக அவர் கூறினார்.

எரிபொருட்கள் இறக்குமதி தனியார்களுக்கு அனுமதி

இலங்கையில் அந்நிய செலவாணி கையிருப்பு தீர்ந்து போனதால், எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு இலங்கை அரசு சென்றுள்ளது. இந்தியா அளித்து வரும் உதவியின் மூலம் தற்போது அது தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சனா விஜேசேகரா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும், பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் சிலோன் பெட்ரோலிய கழகம், எரிபொருள் நிலையங்களுக்கு சுமை குறையும்,’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: