வெளி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல, சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் கிளஸ்டர் பாதிப்பு உருவாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னையில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு குடும்பத்திற்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் 93.74% பேர் முதல் தவணையும், 82.55% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அதேபோல, 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி, 1.22 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், 13 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.தடுப்பூசி போட தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனை அல்லது வீட்டிலேயே சிகிச்சை பெற வேண்டும். சுகாதாரத் துறை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: