×

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் உருவ சிலை: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற உள்ள விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞரை சிறப்பித்து  போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர்  தோட்டத்தில் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உருவச்  சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் இன்று மாலை 5.30  மணியளவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு  திறந்து வைக்க உள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் கலைஞர். நீதிக்கட்சியின் பேச்சாளர் அழகிரிசாமி, பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிட சிந்தனை கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தன்னை முழுமையாக திராவிட இயக்கத்திற்கு அர்ப்பணித்தார்.

80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும் போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர். 60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு காலம் திமுக தலைவராகவும் இருந்தார்.  கலைஞர் 1957ல் முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1957ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.  1969ம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி
ஏற்றார். இதன் தொடர்ச்சியாக 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி,  தாய்த் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தமிழ்ச் சமுதாய மக்கள் கல்வியிலும், சமூக நீதியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை இந்திய திருநாட்டின் முன்னோடி மாநிலமாக திகழச்செய்தார்.

 கலைஞர் முதல்வராக இருந்தபோது  குடிசைமாற்று வாரியம் அமைத்தது, பேருந்துகள் நாட்டுடமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநில திட்டக்குழு உருவாக்கம், பெண்களுக்கு சொத்துரிமை,  வன்னியர் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உயர்கல்வி துறை, நெடுஞ்சாலை துறை, தகவல் தொழில்நுட்ப துறை புதிதாக உருவாக்கம்,  உழவர் சந்தை, வரும் முன்காப்போம் திட்டம், பெரியார் நினைவு சமத்துவப்புரம் போன்ற திட்டங்கள் தொடங்கினார். அந்த திட்டங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.

16 அடியில் கலைஞர் சிலை
1 கோடியே 7 லட்சம் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞருக்கு சிலை தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 16 அடி உயரத்தில் தயாரான சிலை, 12 அடி பீடத்தில் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிலை மட்டும் 2 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டது. இந்த சிலை அண்ணா சாலை வழியாக செல்வோரை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. கலைஞர் தினசரி சென்று பார்த்து பார்த்து கட்டிய அழகான கட்டிடத்தை, அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். மேலும், அந்த வளாகமும் பராமரிப்பு இல்லாமல் காட்சி அளித்தது. தற்போது, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கலைஞரின் சிலையை அந்த வளாகத்தில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்த வளாகத்தை சுற்றியுள்ள பூங்காக்களும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதன்மூலம் சென்னை மக்கள் மற்றும் சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் கூட கலைஞர் சிலையை பார்த்து செல்லும் ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

கலைஞர் பற்றி  தலைவர்கள்  கூறியது...
தந்தை  பெரியார், ‘கலைஞரை அறிவில் சிறந்தவர்  என்றும் நிர்வாகத்தில் சிறந்தவர்  என்றும் பொதுத் தொண்டுக்காக தியாகம்  செய்வதில் சிறந்தவர்’ என்றும்  பாராட்டினார். பேரறிஞர் அண்ணா, ‘தண்டவாளத்தில் தலைவைத்து படு’ என்று  சொன்னாலும், ‘அமைச்சர்  பதவி ஏற்றுக் கொள்’ என்று சொன்னாலும் இரண்டையும்  ஒன்றாக கருதுபவர்   என் தம்பி கருணாநிதி’  என்றும், ‘என் தம்பி  பாளையங்கோட்டை தனிமை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் புனித  பூமி’ என்றும்  போற்றினார். பேராசிரியர் அன்பழகன், ‘எறும்பு போன்ற   சுறுசுறுப்பும் - யானை போன்ற நினைவாற்றலும் - எருது போன்ற ஊக்கமும் -   குதிரை போன்ற விரைவுத் திறனும் ஆகியவை நாட்டை ஆள்பவரிடம் நிரம்ப வேண்டும்   எனில் இவை யாவற்றிலும் முன்னிற்பவர் கலைஞர்  என்று  குறிப்பிட்டார்.

Tags : Omanthurai Government Garden, Chennai ,Vice President ,Venkaiah Naidu , Chennai Omanthurai Government Estate Artist statue: Vice President Venkaiah Naidu Opens today
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!