நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 40 கி.மீ.க்கு குழாய் பதிக்கும் பணி தீவிரம்: நகராட்சி துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் செயல்பட்டு வரும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, விநியோகம் செய்ய பல்லாவரம் வரை 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1400/1200 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை முட்டுக்காடு படகு குழாம் அருகில் ஆய்வு செய்தார்.  

 இந்நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீர், மேடவாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் சிறுசேரி பகுதியில் உள்ள சுமார் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.    இந்த ஆய்வின் போது, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய முதன்மை செயலாளர் விஜயராஜ் குமார்,   செயல் இயக்குனர் ஆகாஷ் மற்றும் பொறியியல் இயக்குனர், தலைமைப் பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: