×

அக்னி நட்சத்திரம் நிறைவு: அண்ணாமலையாருக்கு நாளை 1,008 கலசாபிஷேகம்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் நிறைவுபெறுவதையொட்டி நாளை திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 கலசாபிசேகம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்தது. ஆனாலும், அடுத்தடுத்து பெய்த கோடை மழையால் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் பெரும்பாலான நாட்களில் தணிந்திருந்தது. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம்தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (28ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம், இரவு 8 மணியளவில் முதல் கால 1,008 கலச பூஜை நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலச பூஜையும், காலை 11 மணிக்கு அண்ணாமலையாருக்கு 1,008 கலசாபிஷேகமும் நடைபெறும். அக்னி நட்சத்திரம் நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும்.

Tags : Annamalaiyar , Agni star completes: 1,008 kalasabhishekam for Annamalaiyar tomorrow
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான...