கிழக்கு திமோரில் இன்று நிலநடுக்கம் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜகார்த்தா: கிழக்கு திமோர் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கும், கிழக்கு திமோருக்கும் இடையே திமோர் தீவின் கிழக்கு பகுதியில்  இருந்து சுமார் 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கிழக்கு திமோர் தலைநகர் டிலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது. கிழக்கு திமோர் மற்றும் இந்தோனேசியா பகுதியானது, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் கடல் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும். இந்தாண்டு பிப்ரவரியில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் 12 பேர் இறந்தனர். கடந்த 2004ம் ஆண்டில், சுமத்ரா கடற்கரை பகுதியில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுமார் 2,20,000 பேர் சுனாமியால் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: