பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவு கிரிமினல் குற்றமில்லை... செக்ஸ்-ஐ தொழிலாக செய்யலாம்; ஆனால் விபசார விடுதி கூடாது!: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கொண்டாடிய பாலியல் தொழிலாளிகள்

புதுடெல்லி: பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் சட்டப் பாதுகாப்பை பெற தகுதியானவர்கள்; பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். உலகளவில் நூறு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 49 சதவீத நாடுகள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட 12 சதவீத நாடுகளில் நிபந்தனைகளோடு பாலியல் தொழில் நடக்கிறது. 39 சதவீத நாடுகளில் அங்கீகாரம் இல்லாமல் பாலியல் தொழில் அரங்கேறுகிறது. உலகில் ஒன்றரை கோடி பேர் விபசாரத்தில் ஈடுபடுவதாக சர்வே தெரிவிக்கிறது. 50 லட்சம் பேர் வரை ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கணிக்க முடிகிறது. இந்தியாவில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. டெல்லி ஜி.பி. சாலையில் பாலியல் தொழில் நடக்கும் 90 இல்லங்களில் 5 ஆயிரம் பெண்களும், 800 சிறுமிகளும் வாழ்கின்றனர்.

அதேபோல், மும்பை, புனே, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாலியல் தொழில் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கான சமூக மற்றும் சட்டப் பாதுகாப்பு என்பது கேள்வியாக உள்ளது. இந்நிலையில், பாலியல் தொழில் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று அளித்த தீர்ப்பில் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பாலியல் தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பை பெற தகுதியானவர்களே. கிரிமினல் சட்டமானது எல்லோர் மீதும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் வயது, பரஸ்பர சம்மதம் ஆகியன பாலியல் தொழிலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இரண்டு வயதுவந்த நபர்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது.

பாலியல் தொழில் கூடங்களை ரெய்டு செய்யும்போது பாலியல் தொழிலாளிகளை கைது செய்வதோ, அபராதம் விதிப்பதோ அவர்களை துன்புறுத்தவோ கூடாது. தன்னார்வத்தில் செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. ஆனால் பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதம். பாலியல் தொழிலாளியின் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது. அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது, அதற்கு தகுந்த காரணம் அல்ல. மனிதர்களின் மாண்பைப் பாதுகாத்தல் என்பது பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஒரு குழந்தை, பாலியல் தொழிலாளியுடன் வாழ்ந்து வந்தால் அந்தக் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

ஒருவேளை அதில் சந்தேகம் ஏற்பட்டால் குழந்தை, தாயின் மரபணுவை பரிசோதனை செய்து பார்க்கலாம். அதைவிடுத்து குழந்தையை வலுக்கட்டாயமாக பிரிக்கக் கூடாது.

பாலியல் தொழிலாளி என்பதால் அவர் கொடுக்கும் பாலியல் வன்கொடுமை புகார்களை ஏற்கக் கூடாது என்பதில்லை. அவர்களுக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்க வேண்டும். பாலியல் தொழிலாளிகள் மீதான காவல்துறையின் அணுகுமுறை கடுமையானதாக இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. சில நேரங்களில் காவல்துறையே அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குகிறது. இந்த விசயத்தில் காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் விடுதிகளில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கைது அல்லது மீட்புப் பணிகளின் போது பாலியல் தொழிலாளியின் அடையாளம், பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் பாலியல் தொழில் சட்டங்களை இயற்றினால், அப்போது பாலியல் தொழிலாளிகளின் கருத்தையும் கேட்டறிய வேண்டும். அதேவேளையில், பார்வை மோகம் என்பது கிரிமினல் குற்றம் என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை’ என்று தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டோர் வரவேற்பு அளித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாலியல் தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

3 முக்கிய அம்சங்கள் பரிந்துரை

கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பாலியல் தொழிலாளர்களுக்காக ஒரு குழுவை  அமைத்தது. அந்த குழு பல்வேறு தரப்பிலும் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பாலியல் தொழிலாளர் பிரச்னை தொடர்பான மூன்று அம்சங்களை அடையாளம் கண்டது. ஒன்று ஆட்கடத்தலைத் தடுப்பது, இரண்டாவது பாலியல் தொழிலை கைவிட விரும்பும்  பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், மூன்றாவது அரசியலமைப்பின்  21வது பிரிவின் விதிகளின்படி பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன்  வாழ்வதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பாலியல் விபசார தொழில் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல; ஆனால் அதற்காக ஒருவரை கட்டாயப்படுத்தி விபசாரத்திற்கு உட்படுத்துவது சட்டவிரோதமானது. விபசார விடுதியின் உரிமையும் சட்டவிரோதமானது.

இனிமேல் என்ன நடக்கும்?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், பாலியல் தொழிலாளர்களுக்கு சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும். ஒரு பாலியல் தொழிலாளி கொடுக்கும் புகார்களை, காவல்துறை தீவிரமாக எடுத்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் விபசார விடுதியில் போலீசார் சோதனை நடத்தினால், சம்பந்தப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் அல்லது தண்டிக்கப்பட மாட்டார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான எந்தவொரு பாலியல் தொழிலாளிக்கும் உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்படும். அனைத்து பாலியல் தொழிலாளர்களையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களை வாய்மொழியாகவோ உடல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

Related Stories: