ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை-சுற்றுலா பயணிகள் அவதி படகு சவாரி நிறுத்தம்

ஊட்டி : ஊட்டியில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளிலும் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்கியது. மலர் கண்காட்சி துவக்க நாள் மற்றும் 21ம் தேதி ஊட்டியில் மழை பெய்தது. இதனால், தாவரவியல் பூங்கா ேசறும் சகதியுமாக மாறியது. மலர் அலங்காரங்கள் பாதிக்கப்பட்டன. அதன்பின், ஊட்டியில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இதனால், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால், பகல் 12 மணிக்கு மேல் ஊட்டியில் கனமழை பெய்யத்துவங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

கன மழை காரணமாக பூங்காவில் அங்காங்கே இருந்தவர்கள் மற்றும் பெரிய புல் மைதானத்திற்குள் இருந்தவர்கள் அனைவரும் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குள் தஞ்சமடைந்தனர்.

பலர் குடைகளை பிடித்தப்படியே பூங்காவை விட்டு வெளியேறினர். சிலர் கொட்டும் மழையிலும் பூங்காவை கண்டு ரசித்தனர். பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அதனை கடந்து செல்ல சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மழை பெய்த சமயத்தில் அனைவரும் பூங்காவை விட்டு ஒரே சமயத்தில் வெளியேறினர். தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அறைகளை தேடியும், வெளியூர்களுக்கும் புறப்பட்டனர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக நகரில் குளிர் நிலவியது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஓட்டல்கள், லாட்ஜ் அறைகளிலேயே முடங்கினர். மழையால் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் முழுமையாக பார்வையிட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

ஒரு சில சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர். அதேசமயம் மழை ஓய்ந்த பின் சுற்றுலா பயணிகள் மீண்டும் தாவரவியல் பூங்காவை முற்றுகையிட துவங்கினர். புல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், பூங்கா சேறும் சகதியுமாக மாறியது.

மழை காரணமாக, ஊட்டி ஏரியில் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதன்பின் வழக்கம் போல், படகு சவாரி துவங்கியது. நகரின் முக்கிய சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: