×

கலெக்டர், எஸ்பி ஆய்வு செய்து உத்தரவிட்டும் காட்சி மாறவில்லை ஆக்கிரமித்து மீண்டும் பார்க்கிங் இடமாகமாறிய மாநகராட்சி நினைவு தூண் பகுதி

* மக்கள் நடந்து செல்லவும் முடியாமல் அவதி

* நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் அமைத்துள்ள மாநகராட்சி நினைவு தூண் பகுதியில் கலெக்டர், எஸ்பி உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு பார்க்கிங் இடமாக மாறியுள்ளதால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர்.வேலூர் புதிய பஸ் நிலையம் தற்போது நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பழைய பஸ்நிலையம், மக்கான் அருகே தற்காலிக பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஒரு பகுதி பஸ்நிலையமாக செயல்பட்டு வருகிறது.

பழைய பஸ்நிலையத்திற்கு பெரும்பாலான பஸ்கள் வந்து செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு அருகில் பைக் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. ஒரு பைக்கை நிறுத்திவிட்டுச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் ஒடுகத்தூர், அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் இடத்தில் பைக்குகள், சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் இடம் தவிர மாநகராட்சி நினைவுத்தூண் பகுதியையும் முழுமையாக ஆக்கிரமித்து பார்க்கிங் பகுதியாகவே மாற்றி உள்ளனர். இதனால் பல லட்சம் முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.

இந்த திடீர் பார்க்கிங் ஆக்கிரமிப்புகளால் அந்த வழியாக பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பஸ் நிலையம் மற்றும் நினைவு தூண் அருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். ஆக்கிரமித்து நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தியதோடு, அந்த பகுதியில் பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து காவலர்கள் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தற்போது மீண்டும் பஸ் நிலையத்தின் ஒருபகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு இருசக்கர வாகன பார்க்கிங் இடமாக மாறி உள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வழியாக மக்கள் நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே முறைகேடாக  ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை உடனே அப்புறப்படுத்துவதுடன் பார்க்கிங்காக பயன்படுத்திய நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பார்க்கிங் இடத்தை மீறி வாகனம் நிறுத்தம்

வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் பார்க்கிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதோடு அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தை மீறி வெளி பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். நினைவு தூண் பகுதிகளில் போலீசாரின் பேரிகார்டுகளையே வேலியாக அமைத்து வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.

இதனால் பர்மா பஜார் பகுதிக்கும் பழைய பஸ்நிலையத்துக்குள்ளேயும் அந்த பகுதி வழியாக வந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. கலெக்டர், எஸ்பி உத்தரவிட்டும் அதை கண்டு கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பைக்குகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Corporation Memorial , Vellore: Occupancies on the orders of the Collector, SP on the Corporation Memorial Pillar area in the old bus stand area of Vellore.
× RELATED கலெக்டர், எஸ்பி ஆய்வு செய்து...