மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்; முக்கொம்பு மேலணையை வந்தடைந்ததால் விதை நெல்,மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்த நிலையில், விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர். வழக்கமாக காவிரி நீரானது ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும். ஆனால் இந்தமுறை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ம் தேதி தமிழக முதல்வரால், இந்த மாதமே தண்ணீரானது திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக 3000 கனஅடி நீரானது திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக 5000 கனஅடியாக உயர்த்தப்பட்டு, இன்று காலை 10,000 கனஅடி நீராக உயர்ந்துள்ளது.

கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது, நேற்று நள்ளிரவு கரூர் மாவட்டம் மாயனூர் மேலணையை வந்தடைந்தது. இன்று காலை முக்கொம்பு மேலணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீரானது அணையை வந்தடைந்தது. இந்த காவிரி நீரை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் மலர் மற்றும் நெற்களை தூவி, காவிரி தாயே வருக!வருக! என்று கோஷங்கள் எழுப்பி காவிரி நீரை வரவேற்றனர். நள்ளிரவு மாயனூர் அணைக்கு 3500 கனஅடி நீர் வந்த நிலையில், அந்நீரானது முக்கொம்பு அணைக்கும் வந்தது. இங்கு வரக்கூடிய நீரானது நேரடியாக  கல்லணைக்கு செல்கிறது. இன்று கல்லணையில் மாலை 5 மணியளவில் அமைச்சர், பெருமக்கள் முன்னிலையில் டெல்டா  பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீரானது திறக்கப்பட உள்ளது.   

Related Stories: