×

மிதக்கும் உணவகம் அமைப்பதற்காக ஏற்காடு படகு இல்லத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு-புலியூரில் சாகச சுற்றுலா தளம் அமைக்கவும் திட்டம்

சேலம் : ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45வது கோடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், சிறு உணவங்கள், புலியூர் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைக்கப்படும் என்று  தெரிவித்தார்.

இதனிடையே படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், சிறு உணவகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: தமிழக முதல்வர் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில், ஏற்காடு படகு இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 ஏற்காடு படகு இல்லமானது சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்த கூடிய இடமாக இருக்கிறது.படகு இல்லத்தினை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ₹25 லட்சம் மதிப்பீட்டில் சிறு உணவகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ஏற்காடு படகு இல்லத்தில் புதிய அனுபவத்தை வழங்கும் விதமாக மிதக்கும் உணவகத்தை அமைப்பதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் உள்ள புலியூர் கிராமத்தில் சாகச சுற்றுலா தளம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாவுக்கென புதிய நெறிமுறைகள் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், படகு இல்ல மேலாளர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,Mathivendan ,Survey- ,Buliur , Salem: Tourism Minister Mathivendan yesterday inspected the feasibility of setting up a floating restaurant at Yercaud Boat House.
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...