சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சம்பவம்: ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சஸ்பெண்ட்..!!

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்.24ல் பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட மின்சார ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த  மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மற்றும் கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயிலின் இரண்டு பெட்டிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஓட்டுநரின் தவறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மின்சார ரயில், ரயில்வே ஊழியர்களின் தீவிர முயற்சியால் நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதனிடையே, மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக லோகோ பைலட் பவித்ரன் மீது உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தது.

பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது ரயில் ஓட்டுநர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடற்கரை ரயில் நிலையத்தில் நடைபாதையின் மீது ரயில் ஓடியது ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: