மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக 64 வயது பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9ம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார். இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் மகன் ஆவார். தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மகன் பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு செனட் சபை தலைவர் மற்றும் பிரதிநிதிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் மார்கோஸ் ஜூனியர், பிலிப்பைன்ஸ் நாட்டில் நல்லாட்சி அமைய தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்தார். பதவி இழக்கும் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டேயின் மகள் சாரா டியூடர்டே துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, முறைப்படி துணை அதிபராக நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். கொரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கம், வறுமை, சமத்துவமின்மை, இனவாத கிளர்ச்சிஉள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியரும், சாரா டியூடர்டேயும் பிலிப்பைன்ஸ் அதிபர், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.