×

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை!: புதிய நிதி உதவி வழங்க திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி அறிவிப்பு..!!

வாஷிங்டன்: இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 12ம் தேதி பதவியேற்றார். ஏறத்தாழ இலங்கையின் பொருளாதாரம் திவாலான நிலையில் சுமார் 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் தவணையை திருப்பி செலுத்தாமல் இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் போதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதி உதவி வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உலக வங்கி, இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க ஆலோசனை வழங்கப்படும் எனவும் அதேநேரம் இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அத்யாவசிய மருந்துகள், உணவு, கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்டவைக்கு மட்டும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டத்தின் மூலம் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.


Tags : Sri Lanka ,World Bank , Economic Crisis, Sri Lanka, Financial Assistance, World Bank
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்