×

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 6

நமது கூந்தலின் தன்மையும், வளர்ச்சியும் எப்படி இருந்தாலும் ஆரோக்கியமான செழுமையான கூந்தலாக இருக்கிறதா என்பதே இங்கு மிகவும் முக்கியம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா. ‘ஹென்னா பேக்’ என்பது மருதாணி மூலிகை இணைந்த ஒரு கலவை. சுருங்கச் சொன்னால் கூந்தல் வளத்திற்கு சத்தை வழங்கும் இயற்கை டானிக். உங்கள் முடி பிரச்சனை எதுவாக இருப்பினும் இந்த ஒன்றிலே அதற்கு தீர்வு உண்டு. முடி கொட்டுதல், நுனி முடிபிளவு, முடி பாதியாக உடைதல், கருமை நிறமின்றி இருத்தல், பொடுகுப் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் தலைமுடியில் இருப்பதை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இது ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகத் தீர்வு காண்பதைவிட, ஒரே வழியில் அதற்கான தீர்வே ஹென்னா பேக். நாற்பது வயதைக் கடந்தவர்கள், நரை முடியை மறைக்க நினைத்து, டை வாங்கி பயன்படுத்தும்போது அதில் கலந்திருக்கும் அமோனியம் மற்றும் பிபிடி பக்கவிளைவு குறித்து அறிவதில்லை. மிகவும் மலிவான விலையில் சின்னச்சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கும் ‘ஹேர் டை’ தரம் குறைவானதாக இருப்பதுடன், தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தும்போது, தோல் வியாதியில் துவங்கி படிப்படியாக பெரிய வியாதிகள் வருவதற்கு முதல் அடியை வைக்கி றோம் என்பதை உணர வேண்டும். மேலும் தாய்மைப்பேறு அடைந்த பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் இருக்கும் வீடுகளில் இந்தப் பொருட்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு எளிதில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

ஆரோக்கியத்தை பாதிக்கும் செயற்கை முறைகளைத் தவிர்த்து, சிறப்புக்கள் நிறைந்த இயற்கையான மூலிகையால் தயாரான ‘ஹென்னா பேக்கை’ பயன்படுத்தினால் கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். முடியின் ஆரோக்கியத்தைப் பொறுத்து, தேவைப்பட்டால் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை ஹென்னா பேக்கை தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாம். ஹென்னா பேக்கை போடுவதற்கு முன்பு, ஷாம்பினால் கூந்தலை அலசி சுத்தம் செய்து நன்றாக உலர்த்த வேண்டும்.

நேரமின்மை காரணமாக, சிலரால் ஹென்னாவை வீட்டில் தயார் செய்வது இயலாத காரியம். அவர்கள் இதற்கென உள்ள அழகுக்கலை நிலையங்களில் இருக்கும் பயிற்சிபெற்ற நிபுணர்களைக் கொண்டு, ஹென்னா போடும்போது, தலைமுடியின் அடியில் இருந்து தொடங்கி நுனிமுடி வரை தடவி அனைத்து முடியிலும் கலவை படுமாறு முறைப்படியாக கூந்தலை பேக் செய்வார்கள். ஹென்னாவை அலசிய பிறகு பார்ப்பதற்கு கூந்தலின் வெளிப்பாடு பார்க்கவே மிகவும் அழகாக
இருக்கும்.

வீட்டிலே ஹென்னா பேக் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

மருதாணி பொடி, செம்பருத்திப் பூ பொடி, ஆவாரம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, கத்தா பொடி, கரிசலாங்கண்ணி இலை பொடி, நீலி அவுரி பொடி, பொடுதலையான் இலை பொடி, வெந்தயப் பொடி மேற்குறிப்பிட்டவைகளை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அவற்றுடன் தேவைக்கேற்ப லெமன் சாறு, பீட்ரூட் சாறு, தயிர், டீ டிக்காஷன் இணைத்து கலவையாக்கி, முதல் நாள் இரவு தகர டப்பா ஒன்றில் இந்த கலவையினைப் போட்டு மூடி வைக்க வேண்டும். இயற்கை முறையில் வேதியியல் மாற்றம் நிகழ, மறுநாள் முடியில் தடவுவதற்கு தயாராக இருக்கும்.

இக்கலவையினை தலையில் போடுவதற்கு முன்பு, பத்து அல்லது பதினைந்து எம்.எல் வொயின் அல்லது பியர் இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து, முடியில் தடவும் அளவுக்கு கொலகொலப்பாக்கி, ப்ரஷ்ஷால் முடியின் அடிக்காலில் இருந்து நுனிவரை படுமளவிற்கு தடவ வேண்டும். தேவைக்கேற்ப இதனை 45 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை அப்படியே விடலாம். கலவை உலர்ந்தபின், கூந்தலை அலசி சுத்தமாக்கி நன்றாக உலர வைக்க வேண்டும்.

ஹென்னா பேக்கினால் வரும் பயன்கள்

* செம்பருத்திப் பூ பொடி முடி வளர்ச்சி மற்றும் மினுமினுப்பிற்கு நல்லது.

* நெல்லிக்காய் பொடி உடல் குளிர்ச்சிக்கு நல்லது.

* மருதாணிப் பொடி முடிக்கு சிவப்பு வண்ணத்தை தரும்.

* கத்தா பொடி, நீலி அவுரி பொடி போன்றவை கருமை நிறம் தரும்.

* கரிசலாங்கண்ணி இலை பொடி முடியின் செழுமையான வளர்ச்சிக்கு உதவும்.

* பொடுதலையான் இலை பொடி பொடுகுப் பிரச்சனையை தீர்க்கும்.

* ஆவாரம் பூ பொடி முடியின் மென்மை, முடி வளர்ச்சி மற்றும் முடியின் பளபளப்புக்கு பயன்படும்.

* பீட்ருட் சாறு, டீ டிக்காஷன் போன்றவை முடியின் நிறத்தை மேம்படுத்தும்.

* தயிர், எலுமிச்சை சாறு, வொயின் அல்லது பியர், வெந்தயப் பொடி போன்றவை முடியின் மென்மைத் தன்மைக்குப் பயன்படுகிறது. மேலே கொடுத்துள்ள ஹென்னா கலவை முற்றிலும் கூந்தலுக்கான ஊட்டச் சத்து. ஷாம்பு பயன்பாட்டிற்குப் பின் பயன்படுத்தும் ஹேர் கன்டிஷனர், சீரம் போன்ற செயற்கைப் பொருட்களை இதில் பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் கூந்தலில் இருக்கும் பிரச்சனைக்கு ஏற்ப, அதற்கான மூலிகை பொடியினை கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக பொடுகுப் பிரச்சனை அதிகம் உள்ளது என்றால். பொடுதலையான் இலை பொடியினை கூடுதலாக இணைக்க வேண்டும். உடல் குளிர்ச்சியினை தாங்காதவர்கள், ஸ்கால்ப்பில் படாத வண்ணம் ஹென்னா கலவையை பயன்படுத்தலாம்.

சென்ற வார கேள்விக்கான பதில்கள்…

* சிலருக்கு முடியில் வாடை வருவது ஏன்?

ஸ்கால்ப்பில் வியர்வை சுரப்பிகள் இருக்கும். தலை வியர்த்து ஈரமானாலும் முடியினை உலர வைத்தல் வேண்டும். அதேபோல் குளித்துவிட்டு ஈர முடியுடன் அப்படியே சென்றாலும் முடியில் ஒருவித துர்நாற்றம் வர ஆரம்பிக்கும்.

* மினுமினுப்பான கூந்தலைப் பெறுவது எப்படி?

மூலிகை கலந்த சீயக்காய் எனில் இயற்கையாகவே மினுமினுப்புத் தன்மை கிடைக்கும். கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காய் அல்லது தரமான ஷாம்பினை பயன்படுத்தி சுத்தப்படுத்தியதும், ஈர முடியில் ஹேர் கன்டிஷனரைப் பயன்படுத்தி மீண்டும் அலச வேண்டும். கூந்தலின் மினுமினுப்பிற்கு சீரம் பயன்படுத்தலாம்.

* தலைமுடியினை முறையாக அலசுவது எப்படி?

முரட்டுத்தனமாக, முடிகளைத் தேய்த்து அலசக் கூடாது. முடியின் போக்கில் தேய்த்து சுத்தம் செய்தல் வேண்டும். ஷவர் வாஸ் செய்து கூந்தலை அலசுவதும் சிறப்பான முறை. ஷாம்பினை தண்ணீரில் கலந்து ஸ்கால்ப்பில் நேரடியாகப் படாமல் முடிகளில் தடவி பின் கூந்தலை மென்மையாக அலச வேண்டும்.

அடுத்த வாரத்திற்கான கேள்விகள்

* பேன் தலையில் வரக் காரணம்?
* பேன் தொல்லை அதிகமானால் சரி செய்வது எப்படி?
* பேன் வராமல் தடுப்பது எப்படி?

Tags :
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!