டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் வீரரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் செல்ல ஐஏஎஸ் அதிகாரி தம்பதி அதிரடியாக ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளது. டெல்லியில் விளையாட்டு வீரா்கள், குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தியாகராஜா மைதானம் உள்ளது. இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த சூழலில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் வாக்கிங் வருவதற்காக வீரர்களை இரவு 7மணிக்கே பயிற்சியை முடிக்க உத்தரவிடப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. கடந்த சில மாதங்களாக சஞ்சீவ் கிர்வார் அங்கு சுமார் 30 நிமிடம் தனது நாயுடன் சென்று நடைபயிற்சி செய்து வருவது தெரிய வந்தது.

இதற்காக இரவு 7 மணிக்கு முன்பாக பயிற்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே ஐஏஎஸ் அதிகாரிக்காக தியாகராஜா ஸ்டேடியத்தில் பயிற்சி எடுக்கும் விளையாட்டு வீரர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே வெளியேற்றப்படுவது தொடர்பான செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘ டெல்லியில் உள்ள அனைத்து அரசு விளையாட்டு மைதானங்களும் இரவு 10 மணி வரை  விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும்படி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சில விளையாட்டு மைதானங்கள் முன்கூட்டியே மூடப்படுவதால், இரவு  வரை விளையாட விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக செய்தி அறிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. முதல்வர் கெஜ்ரிவால் அனைத்து விளையாட்டு அரங்குகளும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்கு திறந்திருக்க உத்தரவிட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில்,’ வெயிலின் காரணமாக விளையாட்டு வீரர்கள் சிரமங்களை எதிர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. மேலும்  மைதானங்கள் மாலை 6 அல்லது 7 மணிக்குள் மூடப்படுவதும் தெரிய வந்துள்ளது. எனவே அனைத்து விளையாட்டு மைதானங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் விளையாட்டு  வீரர்கள் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி அரசிடம், ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது. அந்த அறிக்கையின்படி, சஞ்சீவ் கிர்வாரை லடாக்குக்கும், ரிங்கு துக்காவை அருணாச்சல பிரதேசத்துக்கும் அதிரடியா இடமாற்ற செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: