×

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(70).  இவரது மனைவி சகுந்தலா(66). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை அதே பகுதியில் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக கடக்கால் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி பள்ளம் தோண்டியபோது, 3 அடி ஆழத்தில் குண்டு செம்பு பாத்திரம் ஒன்று கிடைத்தது. அதில் ஏதாவது புதையல் இருக்கும் என நினைத்த சகுந்தலா, இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். தகவலறிந்து ஆரணி தாசில்தார் பெருமாள்,  வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சகுந்தலா, `அந்த புதையல் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைத்தது. அதனை யாரிடமும் தர முடியாது’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை செய்து, புதையல் செம்பு பாத்திரத்தை பறிமுதல் செய்தனர். அது ஏற்கனவே உடைக்கப்பட்டு இருந்தது. அதில் கால் சலங்கை மணிகள் 23,  உடைந்த நிலையில் காப்பு வடிவிலான பொருட்கள் 10, மணி துண்டு 1, சிறிய துண்டுகளாக 13 பொருட்கள், சதுர வடிவில் உலோகம் 1 ஆகியன இருந்தன.

வேறு ஏதாவது பொருட்கள் இருந்ததா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அந்த செம்பு பாத்திரத்திற்கு சீல் வைத்து, ஆரணி தாலுகா அலுவலக ஸ்டராங் ரூமில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதுகுறித்து ஆரணி தாசில்தார் பெருமாள், திருவண்ணாமலை தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த புதையல் பொருட்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்த பிறகே, அதிலிருந்த பொருட்கள் தங்கமா, எத்தனை ஆண்டுகள் பழமையானவை போன்ற விவரங்கள் தெரியவரும் என தாசில்தார் தெரிவித்தார்.

Tags : Arani ,Mullandram , Treasure found in a copper pot in a ditch dug to build a house in Arani next to Mullandiram village: Argument with authorities over refusal to hand over
× RELATED 150 கிலோ மிளகாய் கொண்டு மகா...