×

நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் சட்டப்படி வழக்கை எதிர் கொள்ள தயார்: மகன் உரிமை கோரிய மேலூர் கதிரேசன் பதில்

மதுரை: மகன் என உரிமை கோரிய விவகாரத்தில் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகர் தனுஷின் நோட்டீசிற்கு, வழக்கை எதிர்கொள்ள தயார் என மேலூர் கதிரேசன் பதில் அளித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி, மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. நடிகர் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்துள்ளார். அதில், ‘‘நடிகர் தனுஷ் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறியும் விதம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. இதன் மீதான முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை. இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவிற்கு பதிலளிக்குமாறு நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மேலூர் கதிரேசனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கூறியிருந்தார்.

இதையடுத்து மேலூர் கதிரேசன் தனது வக்கீல் டைட்டஸ் மூலம் நடிகர் தனுசுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தங்களின் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். தாங்கள் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 28.7.1983ல் பிறந்தீர்கள் என்பது தவறு. இந்த விவகாரத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். தாங்கள் என்னுடைய மகன் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இதற்காக ரூ.10 கோடி கேட்டு தாங்கள் அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் தொடரும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என அதில் கூறியுள்ளார்.

Tags : Dhanush ,Melur Kathiresan , Actor Dhanush ready to face Rs 10 crore compensation notice: Melur Kathiresan
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்