×

அதானி துறைமுகத்தில் ரூ.500 கோடி கோகைன் பறிமுதல் போதை பொருட்கள் கடத்தல் தலைநகராக மாறும் குஜராத்: வெளிநாட்டில் இருந்து வந்த கன்டெய்னர்களில் பதுக்கல்

புஜ்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதை பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது.

ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானிக்கு சொந்தமானது தான் இந்த முந்த்ரா துறைமுகம். இந்த துறைமுகத்தின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இம்மாநில துறைமுகங்களுக்கு  வெளிநாடுகளில் இருந்து வரும்  சரக்கு கப்பல்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. சமீபத்தில், அமரேலி மாவட்டத்தில் உள்ள பிபவாவ் துறைமுகத்தில் ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டலா துறைமுகத்தில் கடந்த மாதம் 260 கிலோ ஹெராயின் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1,300 கோடி.

இந்நிலையில், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முந்த்ரா துறைமுகத்தில் வைக்கப்பட்டு உள்ள கன்டெய்னர்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு கன்டெய்னரில் வைக்கப்பட்டு இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 56 கிலோ கோகையன் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச விலை ரூ.500 கோடி. கடந்தாண்டு செப்டம்பரில் ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த கன்டெய்னர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சோதனையில் இதை விட பெரியளவில் போதை பொருட்கள் சிக்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அது பற்றிய விவரங்களை தெரிவிக்க வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

Tags : Adani port ,Gujarat , Rs 500 crore cocaine seized at Adani port Gujarat to become drug trafficking capital Gujarat: Hoarding of containers from abroad
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...