×

சீனாவின் ஆதிக்கம், செல்வாக்கை ஒடுக்க ‘ஆசியாவுக்கு ஒரு நேட்டோ’ அமெரிக்காவின் பலே ராஜதந்திரம் இந்தியாவை வைத்து நடக்கும் நாடகம்

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனா வைரஸ், ரஷ்ய- உக்ரைன் போர், பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை, 3 அல்லது 4 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு என அசாதாரண சூழ்நிலையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், என்றுமே உலகம் தன்னை சுற்றியே சுழல வேண்டும், தங்களின் ஆதிக்கமே என்றும் நிலைக்க வேண்டும் என்ற ஒரு ராஜதந்திரத்தை அமெரிக்க, ரஷ்ய, சீன ஆகிய நாடுகள் கையில் எடுத்துள்ளது.

இதற்காக ஐரோப்பிய யூனியன், நேட்டோ, குவாட், பசிபிக் பிராந்தியம், ஜி-7, ஜி-20 என்ற தனித்தனியாக அமைப்புகள் உருவாக்கி பல்வேறு நாடுகளை இணைத்து, பொருளாதார மேம்படுத்த திட்டங்கள், வர்த்தக பரிமாற்றம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமூகமான உறவை வலுப்படுத்த ஒரு பொதுவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து அந்நாடுகளின் தலை எழுத்தையே மாற்றி வருகின்றனர் இந்த மும்மூர்த்திகள். இவர்களின் ராஜதந்திரத்தால், புதிய பனிப்போர் அல்லது மோசமான 3வது உலகப் போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  

உலகின் வல்லரசு நாடு என்றால் அது அமெரிக்காதான். காரணம், அவர்களின் டாலர் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகில் எந்த மூளைக்கு சென்றாலும், டாலருக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை வேறு எந்த நாட்டின் நாணயத்துக்கும் இல்லை. டாலரின் புழக்கம் உலகம் முழுவதும் பரவி உள்ளதால், அதன் மதிப்பு எகிறியது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவுக்கு முக்கிய வருமானமே ராணுவ தளவாடங்கள் தயாரித்து விற்பனை செய்வதுதான்.

ஒரு ஏவுகணை தயாரித்து விற்றாலே பல்லாயிரம் கோடி சம்பாதித்து விடுவார்கள். இதேபோல் கச்சா எண்ணெய், காஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பைப் லைன் மூலம் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று மிகப்பெரிய வியாபாரியாக உருவெடுத்துள்ளது அமெரிக்கா. இந்த ஆயுதத்தையே, ஒரு ஆயுதமாக வைத்து உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள குட்டி நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை அனைத்தையும் வளைத்து போட்டுள்ளது. ஆனால், இந்த ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது ரஷ்யாவும், சீனாவும்...

* 66 நாடுகளில் சீனா ஆதிக்கம்
அமெரிக்கா பாணியில் சீனாவும் கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி 66 நாடுகளில் தடம் பதித்துள்ளது. வர்த்தக ரீதியில் அவர்கள் உள்நாட்டு உற்பத்தியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி உள்ளது. இதனால், சமீப ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ரஷ்யா ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, கச்சா எண்ணெய், காஸ் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் முக்கிய பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. ராணுவத்தை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு போட்டியாக எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் போர் விமானங்கள், நீண்ட தூரம் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணை போன்றவற்றையை தயாரித்து அமெரிக்காவை மிரள வைத்துள்ளது. இதையெல்லாம் ரஷ்யா உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் விற்று வருகிறது. கச்சா எண்ணெய், காஸ் போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யும் மிகப்பெரிய வியாபாரியாக உள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் வளர விடாமல் தடுக்க அமெரிக்கா கையில் எடுத்த ராஜதந்திரம்தான் நேட்டோ மற்றும் குவாட்.

* நேட்டோவில் இணைய தூண்டும் அமெரிக்கா
2ம் உலகப் போருக்கு பிறகு தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பு, ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யாவின் வளர்ச்சியை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவின் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அதன் அண்டை நாடுகளாக உக்ரைன், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை நேட்டோவில் இணைய வைத்து, அதன் மூலம் குடைச்சல் கொடுக்க அமெரிக்கா எண்ணியது. அதில் மண்ணை போடும் வகையில், நேட்டோ என்ற அமைப்பே மறந்து விட வேண்டும் என்று உக்ரைன் மீது போர் தொடுத்து பாடம் கற்பித்துள்ளது ரஷ்யா. இருப்பினும், பல்வேறு ராணுவ மற்றும் நிதி உதவிகளை வாரி வழங்கியது அமெரிக்கா. நேட்டோ கூட்டமைப்பு நாடுகளும் அள்ளி கொடுத்தது. ஆனால், யாருக்கும் அசராமல் தனது இலக்கை அடைந்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின். போரில் உக்ரைன் சுடுகாடாக மாறி உள்ளது.

* எல்லா பக்கமும் தூண்டில்
நேட்டோவின் மூலம் ரஷ்யாவுக்கு செக்  வைத்து செயல்படும் அமெரிக்கா, ஆசிய கண்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க, ‘குவாட்’ மூலம் காய்களை நகர்த்தி வருகிறது. மற்றொரு வகையில் சொல்வது என்றால், ‘ஆசியாவின் நேட்டோ’வாக இந்த அமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது. தற்போது, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாஆகிய நாடுகள் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளன. இதை மேலும் பெருக்கி, ஆசிய கண்டத்தை சேர்ந்த மேலும் பல நாடுகளை இணைத்து நேட்டோ  அமைப்பை போல் இதையும் பலமிக்க அமைப்பாக மாற்றி விட்டால், சீனாவின் கதையையும் முடித்து விடலாம் என்பது அமெரிக்காவின் திட்டமாக இருக்கிறது. தற்போது, அதன் நோக்கம் வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. அதற்கு அது பயன்படுத்தும் பகடைக்காய் தான் இந்தியா.

இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருக்கின்றன.  தற்போது, உக்ரைனுக்கு எதிரான போரில், ஐநா.வில் ரஷ்யா மீது கொண்டு வந்த  தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்து வாக்கெடுப்பை புறக்கணித்து வருகிறது. அதே நேரம், சீனாவுக்கு இந்தியா நம்பர்-1 எதிராக இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியிலும், ராணுவ பலத்திலும் தனக்கு போட்டியாக இந்தியா வளர்வதை சீனா விரும்பவில்லை. அதன் காரணமாகவே, இந்தியா தனது பணத்தை பொருளாதார வளர்ச்சி  பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், லடாக் எல்லையில் ‘போர்’ என்ற தந்திரத்தை கையாண்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் இந்த மோதலைதான், ‘ஆசிய நேட்டோ’ திட்டத்துக்கு அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதாவது, ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா மிக தெளிவாக சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது. ‘அரசியலில் நிரந்திர எதிரிகளும் இல்லை... நிரந்திர நண்பனும் இல்லை...’ என்பதுபோல் இருநாடுகளுடனும் சுமூகமான உறவை பேணி காத்து வருகிறது.

* ‘கேம் சேஞ்சர்’ வெற்றியடையுமா?
அமெரிக்காவின் திட்டத்தை அறிந்துள்ள சீனா, அதற்கு போட்டியாக வியூகங்களை மாற்றி வருகிறது. ‘குவாட்’க்கு போட்டியாக, ‘பசிபிக் பிராந்தியம்’ என்ற ஆயுதத்தை சீனா கையில் எடுத்துள்ளது. 10 சிறிய பசிபிக் நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தற்போது சீனா இறங்கி உள்ளது. இந்த நாடுகளுக்கு சீன வெளியுறவு அமைச்சர் தலைமையிலான குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதுகாப்பு முதல் மீன்வளம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான ஒப்பந்தத்தில் கையெழுதிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில், ‘போலீஸ் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒத்துழைப்பு, பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சி, நாடு கடந்த குற்றங்களை கூட்டாக எதிர்த்துப் போராடுவது, கூட்டாக மீன்வளத்திற்கான கடல் திட்டத்தை உருவாக்குவது, பிராந்தியத்தின் இணைய நெட்வொர்க்குகளை இயக்குவதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பசிபிக்  நாடுகளுடன் சுதந்திர வர்த்தகப் பகுதியை அமைப்பது, அரசாங்கங்கள், சட்டமன்றங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது’ போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தமும் நேட்டோ அமைப்பு ஒப்பந்தத்துக்கு இணையாக உள்ளது. இதில், பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இதில் கையெழுத்திட்டால், அந்த நாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து, அந்நாடுகளில் கால் பதித்து எதிரிகளை எளிதில் வீழ்த்தலாம் என்று சீனா எண்ணுகிறது. இதேபோல், தெற்கு ஆசியா நாடுகளையும் வளைக்க மெகா திட்டத்தை போட்டு வருகிறது. இந்த திட்டம் சீனாவின் ‘கேம் சேஞ்சர்’ ஆக மாறுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

* 10 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்  
பசிபிக் பிராந்திய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமையில் 20 பேர் கொண்ட குழு இன்று முதல் 10 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறது. சாலமன் தீவு, கிரிபட்டி, சமோவா, பிஜி, டோங்கா, வனுவாடு, பப்புவா நியூ கினியா, குக் தீவுகள், கிழக்கு திமோர் மற்றும் பெடரேட்டட் ஸ்டேட்ஸ் ஆப் மைக்ரோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அது செல்கிறது. சாலமன் தீவில் இருந்து இந்த பயணம் தொடங்குகிறது. மே 30ம் தேதிக்கு பின் 10 நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

அதில், சீனா முன்மொழிந்துள்ள ஒப்பந்தத்திற்கு பசிபிக் நாடுகள் அங்கீகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் பசிபிக் தீவுகளின் வெளியுறவு அமைச்சர்களை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் சந்தித்து பேசிய நிலையில், தற்போது 2வது சந்திப்பாக இது நடக்கிறது. பசிபிக் நாடுகளில் நேரடி முதலீடுகளை செய்து தொழில்களை பலப்படுத்துவது, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிப்பது, உதவிகளை வாரி கொட்டுவது போன்ற செயல்கள் மூலம், தான் நினைத்ததை சாதிக்க சீனா துடிக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து நாட்டை குத்தகைக்கு எடுத்ததுபோல், பசிபிக் பிராந்தியத்தை வளைக்க முனைப்பு காட்டி வருகிறது.

* தீவு நாடுகளை ஆக்கிரமிக்க சீனா திட்டம்
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வாஷிங்டனில்  நிருபர்களிடம் கூறுகையில், ‘பசிபிக் பிராந்திய கூட்டமைப்பு தொடர்பாக  முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, தீவுகளை சாதகமாக்கிக்  கொள்ளவும், பிராந்தியத்தை சீர்குலைக்கவும் சீனா முயற்சிக்கக் கூடும். சீன பாதுகாப்பு அதிகாரிகளை பசிபிக் நாடுகளுக்கு அனுப்புவதை உள்ளடக்கிய  உடன்படிக்கைகள், சர்வதேச பதட்டங்களைத் தூண்டுவதற்கும், சீனா உள் பாதுகாப்பு  உபகரணங்களை பசிபிக் பகுதிக்கு விரிவுபடுத்துவது அதிகரிப்பதற்கும் மட்டுமே  முயல்கிறது’ என்று எச்சரித்து உள்ளார்.

* உலகத்தின் டான் யார்?
பசிபிக் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியை போன்று, தைவானை சீனா கைப்பற்றும் வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறது. குவாட் மாநாடுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பைடனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘தைவான் மீது சீனா ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் தொடங்கும்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதற்கு சீனா இன்னும் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போரில் கிட்டத்தட்ட நேரடியாக போர் களத்தில் அமெரிக்கா இறங்கி உள்ளது. பல்வேறு ராணுவ, நிதி உதவிகளை செய்து, கடைசி வரை உக்ரைனுக்கு ஆதரவாக நிற்போம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ‘உலகத்தின் டான் யார்’ என்ற மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதில் வெற்றி பெறப் போவது நாடுகளா அல்லது இயற்கை வளங்களும், மக்களுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.

* டாலரா? ரூபிளா?
உலகளவில் டாலருக்கும், ரூபிளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. போருக்கு பின் பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதித்தன. இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு அதிரடியாக சரிந்தது. இதையடுத்து, ரஷ்யாவில் அமெரிக்கா டாலர் பயன்படுத்துவதற்கு ரஷ்யா தடை விதித்தது. குறிப்பாக, வெளிநாடு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்போது ரூபிளில்தான் பணம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இவ்வாறு செய்யாத நாடுகளுக்கு ஏற்றுமதியை நிறுத்தி அச்சுறுத்தி உள்ளது. தற்போது, அனைத்து நாடுகளும் ரூபிளில்தான் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.

* சீனா சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியா எதிர்ப்பு
சீனா கடந்த மாதம் சாலமன் தீவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தப்படி, சாலமன் நாட்டிற்கு சீனா துருப்புக்களை அனுப்பலாம் அல்லது ராணுவ தளத்தை கூட அமைக்கலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் சுற்றுப் பயணத்திற்கு நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். ஏனெனில், இந்த பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா முயல்கிறது’ என்றார்.

* மிகவும் ஆபத்தான ஒப்பந்தம்
சீனா அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மைக்ரோனேசியாவின் அதிபர் டேவிட் பானுலோ, மற்ற பசிபிக் நாடுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘சீனாவின் ஒப்பந்தத்தை எங்கள் நாடு ஆதரிக்காது. இது தேவையில்லாமல்  அரசியல் பதற்றத்தை அதிகரிக்கும். மற்றும் பசிபிக் பிராந்திய ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும். இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தின் மீன்பிடி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை சீனா சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும்  கதவைத் திறக்கிறது. மின்னஞ்சல்களை இடைமறித்து தொலைபேசி அழைப்புகளைக் சீனா கேட்க முடியும். இது புதிய பனிப்போர் சகாப்தத்தையும், மோசமான உலகப் போரையும் கொண்டு வர அச்சுறுத்துகிறது’ என்று கூறி உள்ளார். இந்த கடிதம் குறித்து தங்களுக்கு  எதுவும் தெரியாது என சீனா மறுத்துள்ளது.

* அடுத்தடுத்து பறந்த ஏவுகணைகள், போர் விமானங்கள்
ஊரே ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், ‘என் வழி தனி வழி’ என்று தனது பாதையை காட்டி உள்ளது வடகொரியா. சமீபத்தில் ஜப்பானில் குவாட் அமைப்பு மாநாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் ஜப்பான் வான் பரப்பில் பறந்து அச்சுறுத்தியது. இந்நிலையில், கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடலை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட மூன்று ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாக ஏவி நேற்று சோதனை நடத்தி உள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழுந்தன. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா-ஜப்பான் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

* கோடிக்கணக்கில் அடிச்சாலும் தள்ளாடாத அமெரிக்கா
பல்வேறு நாடுகள் தங்கள் ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சடித்து புழக்கத்தில் விட்டால், கடுமையான பணவீக்கத்தை சந்திக்கும். இதற்கு சாட்சி இலங்கை. கடுமையான பொருளாதார நெருக்கடி, அன்னிய செலவாணி சரிவு போன்ற காரணங்கள் 40 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நாடு ஏற்கனவே பலமுறை பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டதால்தான் இந்த நிலை உருவாகி இருக்கிறது. தற்போது நிலைமை மோசமாக உள்ளதால், மீண்டும் பணத்தை அச்சடிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா தனது டாலரை அச்சடித்து அச்சடித்து உலக நாடுகளுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. எவ்வளவு அடித்தாலும், உலகளவில் உள்ள மதிப்பு காரணமாக அமெரிக்கா எந்த தள்ளாட்டமும் காணாமல் வெற்றிநடை போட்டு வருகிறது.

* கடுப்பாகும் சீனா
இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது, உள்நாட்டு உற்பத்தியில் தனி கவனம் செலுத்தி தர்சார்பு நாடாக மாறி வருகிறது. குறிப்பாக, முப்படைகளுக்கு தேவையான ஏவுகணை, போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல், போர் கப்பல்கள் என ஒவ்வொன்றாக தயாரித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுதவிர, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரம், வெளியுறவு கொள்கை போன்றவற்றில் இந்தியா முன்னோடியாக உள்ளது. இதனால், இந்தியாவிடம் உறவை மேம்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெருக்கம் காட்டி வருகிறது. இது, உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எல்லையில் இந்தியாவுக்கு குடைச்சலை கொடுத்து வருகிறது.

Tags : NATO ,Asia ,China ,US ,India , ‘A NATO for Asia’ to suppress Chinese domination and influence US diplomacy plays with India
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…