×

சுற்றுச்சூழலை காக்க குழந்தைகள் உருவாக்கிய சீட்டாட்டம்

உலகெங்கிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து எதிர்காலத்தை காக்க குழந்தைகள் பலர் களமிறங்கியுள்ளனர். சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரீட்டா துன்பெர்கில் தொடங்கி சிறுவர் சிறுமிகள் பலரும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் வனக்காடுகள் போன்ற இயற்கை வளங்களையும் உயிர்களையும் பாதுகாக்க குரல் கொடுக்கின்றனர். பெரியவர்கள் படிப்பு, வேலை போன்ற அமைப்புக்குள் யோசிக்கவே நேரமில்லாமல் சுழன்றுகொண்டிருக்க, குழந்தைகளோ எளியோர் பற்றிய சிந்
தனையுடன் மற்றவர்களின் நலனுக்கும் முக்கியத்துவத்தை அளிக்கின்றனர்.

அப்படி, சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்தில் புதிய விளையாட்டை கண்டுபிடித்துள்ளனர் ஆன்யா, ரியா இரட்டை சகோதரிகள்.  ஏழாம் வகுப்பு பயிலும் இவர்கள், ஒரு நாள் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றவர்கள், அங்கே ப்ளாஸ்டிக் குப்பையில் சிக்கி உயிரிழந்த ஆமையை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குழந்தைகளின் மனதை பெரிதும் பாதித்துள்ளது. ஆனால் இவர்கள் நம்மைப் போல குறை கூறிவிட்டு நகர்ந்து போகவில்லை. நாம் அலட்சியமாக செய்யும் பல விஷயங்கள்தான் நாளடைவில் இயற்கையை அழிக்கிறது என்பதை உணர்ந்து, அனைவரிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினர்.

அந்த நேரம்தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தை சரியாக திட்டமிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கார்டு கேமை கண்டுபிடித்தனர். சில ஆராய்ச்சிக்குப் பின், 92 கார்டுகளை உருவாக்கினர். அதை பரிசோதித்த பின் ஐம்பது கார்டுகளாக குறைத்து ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு படத்தை தேர்வு செய்து திறமையான ஓவியக்கலைஞர் ஒருவரிடம் தங்கள் திட்டத்தை கூறியுள்ளனர். அதிலிருந்து அவை அழகிய ஓவியமாக மாறி கார்டுகளாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஐம்பது கார்டுகளைக் கொண்டு பலவிதமான விளையாட்டுகளை விளையாடலாம் என இருவரும் தெரிவிக்கின்றனர்.

இந்த விளையாட்டை உருவாக்க மொத்த திட்டமிடலையும், பட்ஜெட், மார்க்கெட்டிங் என அனைத்து தீர்வுகளையும் ஆன்யாவும் ரியாவும் இணைந்தே முடிவு செய்துள்ளனர்.  ஒவ்வொரு கார்டும், அதிக தாக்கம் அல்லது குறைந்த தாக்கம், அதிக முயற்சி அல்லது குறைந்த முயற்சி, அதிக செலவு அல்லது குறைந்த செலவு போன்ற விதிகளின் கீழும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகள், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து இவர்
களின் தந்தை சமீர் மெஹ்தா, “ஒரு பக்கம் அச்சு செய்வதை விட, இரண்டு பக்கங்களிலும் அச்சிட்டாலே, காகிதங்களை குறைத்து பசுமையை காக்கலாம் என்பதை என் குழந்தைகள் தான் எனக்கு சொல்லிக்கொடுத்தனர்.

மேலும், இந்த விளையாட்டை உருவாக்க தீவிரமாக இறங்கியதிலிருந்து, வீட்டில் மின்சார உபயோகம் முதல் தண்ணீர் பயன்பாடு வரை எதையும் வீணாக்காமல், பெரியவர்களிடமும் கண்டிப்புடன் தேவையில்லாத பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். குழந்தைகளே விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது வியப்பாக இருக்கிறது. அதனால் அவர்களின் விதிகளை நாங்களும் மீறுவதில்லை” என்கிறார்.  இந்த சீட்டு விளையாட்டில், நாம் அன்றாடம் செய்யக்கூடிய சிறிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. அதைப் பின்பற்றி நாம் செய்யக்கூடிய எளிய முயற்சிகள், செலவுகளை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்கின்றனர்.

இந்த விளையாட்டை குடும்பமாக விளையாடும் போது, அனைவருமே விழிப்புணர்வுடன் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம்.
இக்குழந்தைகளின் பெற்றோர், ‘ஆர்யா ப்ளே’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதில் ஏற்கனவே ஐந்து விதமான கார்டு கேம்களை உருவாக்கியுள்ளனர். இந்த விளையாட்டுகள் அனைத்துமே ஒருவரை மேலும் புரிந்துகொள்ளவும், நம்மை நாமே பகுப்பாய்வு செய்துகொள்ளவும், குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிகளை தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. இந்த விளையாட்டுகளை உளவியல் மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இப்போது அதே ஆர்யா ப்ளே வாயிலாகத்தான் இந்த சுற்றுச்சூழல் விளையாட்டும் வெளியாகிறது. விரைவிலேயே தமிழ், இந்தி, குஜராத்தி போன்ற பல இந்திய மொழிகளிலும் வரவிருக்கும் இந்த விளையாட்டை ஆன்லைனிலும் விளையாடலாம். இந்த சீட்டுகட்டு விளையாட்டு அமேசான் மற்றும் ஃப்லிப்கார்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. தற்போது குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால், அவர்கள் செல்போன் டிவியினை தவிர்த்து இது போன்ற விளையாட்டினை குடும்பத்துடன் விளையாடும் போது, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும் என்கின்றனர் இந்த இரட்டை சகோதரிகள்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...