இளம்பிள்ளை அருகே கடைகளில் தக்காளி திருடிய டிப்டாப் வாலிபர்: சமூக வலைதளங்களில் வைரல்

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருடுபோனது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனிடையே பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள மளிகை கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த தக்காளி கிரேடு திருடுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தார்.

அப்போது, அதில், டூ வீலரில் வரும் டிப்டாப் வாலிபர் ஒருவர், யாரும் பார்க்காத நேரமாக, நைசாக தக்காளிகளை கிரேடுடன் திருடிச்செல்லும் காட்சிபதிவாகியிருந்தது. இதனை பார்த்து கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வாலிபர் ஒருவர் தக்காளிகளை கிரேடுடன் திருடிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Related Stories: