×

வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் தங்க புதையல்?..ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி: ஆரணி அருகே விவசாயி வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த புதையலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் உள்ள பொருட்கள் தங்கத்தால் ஆனதா என ஆய்வு செய்ய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(70), விவசாயி. இவரது மனைவி சகுந்தலா(66). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கினர்.

இதற்காக கடந்த 23ம்தேதி அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டினர். அப்போது 3 அடி ஆழத்தில் செம்பு பாத்திரம் ஒன்று மூடப்பட்ட நிலையில் இருந்தது. இதைபார்த்த கட்டிட தொழிலாளர்கள், செம்பு பாத்திரத்தை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்துள்ளனர். இதை வாங்கிய சகுந்தலா, தங்க புதையல் இருக்கும் என நினைத்து வெளியே யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு எடுத்து சென்று வைத்துள்ளார்.

இந்த தகவல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. சிலர் இதுகுறித்து ஆரணி வருவாய்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார் பெருமாள், வருவாய் ஆய்வாளர் தேவி, விஏஓக்கள் கார்த்திக், விஜயகுமார், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் நேற்றிரவு சகுந்தலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சகுந்தலா புதையலை வருவாய் துறையினரிடம் தர மறுத்துள்ளார். மேலும், ‘புதையல் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைத்தது.

உங்களிடம் தரமுடியாது’ எனக்கூறி வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், சகுந்தலாவின் வீட்டில் சோதனை நடத்தி புதையல் பாத்திரத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த  செம்பு பாத்திரம் உடைக்கப்பட்டிருந்தது. வருவாய் துறையினர், ெசம்பு பாத்திரத்தில் இருந்த பொருட்களை ேசாதனையிட்டனர்.

அதில் கால் சலங்கை மணிகள் 23, உடைந்த நிலையில் காப்பு வடிவிலான பொருட்கள் 10, மணித்துண்டு 1, சிறிய துண்டுகளாக 13 உலோக பொருட்கள், சதுர வடிவிலான உலோக பொருள் 1 ஆகியவை இருந்தது. இதில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்ததா? என சகுந்தலாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் புதையல் பொருட்களுக்கு ‘சீல்’ வைத்து, ஆரணி வருவாய் ேகாட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த புதையல் பொருட்கள் இன்று தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்த பின்னர்தான் புதையலில் இருந்தவை தங்கத்தினால் ஆனா பொருட்களா அல்லது வேறு உலோகமா? எத்தனை ஆண்டுகள் பழமையானது போன்ற விவரங்கள் தெரிய வரும் என தாசில்தார் பெருமாள் தெரிவித்தார்.

Tags : Aurani , Gold treasure, turmoil near Arani, agricultural land
× RELATED மேற்கு ஆரணி வட்டாரத்தில் நவரை...