×

குமரி மாவட்டத்தில் சானல்களின் குறுக்கே இருக்கும் பாலத்தால் தூர்வாருவதில் சிக்கல்

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் விளைவிக்கும் பயிர்கள் அனைத்தும், அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை நம்பியே உள்ளது. நெல்சாகுபடி ஆற்றுபாசனம், குளத்துபாசனத்தால் நடந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் ஒன்றாம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படும். அணை திறப்பதற்கு முன்பு அணையில் இருந்து தண்ணீர் செல்லும் அனைத்து சானல்கள் வருடம் தோறும் தூர்வார்வது வழக்கம். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டு வருகிறது.

 வருடம் தோறும் தூர்வாரினாலும், கடைவரம்புவரை தண்ணீர் செல்வது கேள்விகுறியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் சானல்களின் குறுக்கே கண்டப்படி பாலங்கள் அமைப்பதால், முறையாக தூர்வார முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சீராக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சானல் அருகே வீடு வைத்திருக்கும் நபர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று வீட்டிற்கு ஒரு பாலம் வீதம் அமைக்கின்றனர். இந்த பாலம் அமைக்க அனுமதிக்கொடுக்ககூடாது என மாதம் தோறும் நடந்து வரும் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் ெதாடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் புதிதுபுதிதாக சானல்களின் குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:
 குமரி மாவட்டத்தில் ஆற்றுபானம், குளத்துபாசனத்தை நம்பியே நெல்சாகுபடி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், தேரூர் உள்ளிட்ட இடங்கள் குளத்து பாசனத்தை நம்பி உள்ளது. தோவாளைசானல், அனந்தனார்சானல், இரணியல் கால்வாய், முட்டம் சானல் உள்பட அனைத்து சானல்களை நம்பி ஆற்றுபாசனத்தை பெறும் வயல்பரப்புகள் குமரி மாவட்டத்தில் பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. குளத்துபாசன வசதி பெறும் பகுதிகள் தற்போது கன்னிப்பூசாகுபடி செய்துள்ளனர். ஆற்றுபாசன வசதி பெறும் பகுதிகளில் சாகுபடி செய்ய, ஜூன் 1ம் தேதி அணை திறப்பை எதிர்நோக்கி விவசாயிகள் காத்து இருக்கின்றனர்.

 அணை திறப்பதற்கு முன்பு அனைத்து சானல்களிலும் தூர்வாரும் பணி நடக்கும். இந்த பணி பெயர் அளவிற்கு மட்டுமே நடந்து வருகிறது. இதனால் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சானல் குறுக்கே அதிக பாலம் இருப்பதால் தூர்வாருவதில் சிக்கல் இருந்து வருகிறது. சானல் ஓரம் அமைந்துள்ள வீடுகளுக்கு பாதை அமைக்கும்போது ஒரு குறிப்பிட்ட வீடுகளுக்கு ஒரு பாலம் என்ற வீதத்தில் அமைத்தால், சானல்களில் தூர் சரியாக எடுக்கலாம்.

 ஆனால் பொதுப்பணித்துறை அனுமதியுடன் வீட்டிற்கு ஒரு பாலம் வீதம் அமைப்பதால், பொக்லைன் கொண்டு தூர்வாரும்போது, பாலம் இருக்கும் பகுதியில் பொக்லைன் எந்திரத்தை சானலில் இருந்து கரைக்கு கொண்டு வந்து பின்பு சானலில் இறக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் சானல் கரை இடிந்து வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது கரை உடையும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி தேவையில்லாத பாலங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் புதிய பாலம் அமைக்கும்போது பல வீடுகளுக்கு குறிப்பிட்ட தூரத்தில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றனர்.

Tags : Kumari district , Kumari district, the bridge across the channels, is in trouble for disturbance
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...