ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் (உலாந்தி) டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று முதல் 31ம் தேதி வரை பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் உள்ள 4 வனச்சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. பயிற்சி அளிக்கப்பட்ட வனத்துறை ஊழியர்களை தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனப்பகுதியில் 60 நேர்கோட்டுப் பாதைகள் அமைத்து, வனவிலங்குகளின் காலடித்தடங்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்கீறல்கள், எச்சம் உள்ளிட்டவர்களை ஜி.பி.எஸ் கருவி மற்றும்  செயலி மூலம் பதிவு செய்தனர்.

வனவிலங்கு கணகெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் இறுதி நாளன்றுஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனச்சரகர் மணிகண்டன் சிங்கோனா வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை தொடக்கி வைத்தார். வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரகர் வெங்கடேஷ் பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இரண்டு வனச்சரகத்தில் தலா 8 இடங்களில் 16 நேர்கோட்டு பாதையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: