மேட்டூர் அணை நீர் திறப்பால் நிலங்களை உழுது எரு அடிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

வல்லம்: மேட்டூர் அணை வழக்கத்தை விட முன்னதாக திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது எரு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 முறை ஜூன் 12ம் தேதிக்கு முன்னர் நீர் திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கடந்த 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் சில இடங்களில் விவசாயிகள் தங்கள் வயலை உழுது, எரு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டாலும் டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் கல்லணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் விவசாயிகள் தங்கள் நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறுவை சாகுபடி அதிகளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வயலை உழுது, எரு அடித்துவிட்டால் தண்ணீர் வந்தவுடன் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் எளிதாக இருக்கும் என்று விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: