×

ஊட்டி அரசு கல்லூரியில் 200 சோலை மரக்கன்றுகள் நடப்பட்டன

ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லூரி வளாகம் மற்றும் மைதானத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பல இடங்களில் எரிபொருள் தேவைக்காக யூகலிப்டஸ், சீகை உள்ளிட்ட அந்நிய மர வகைகள் நடவு செய்யப்பட்டன. இவை மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் பரவலாக காணப்படுகின்றன.

இந்த மரங்கள் நீர்வளத்தை உறிஞ்சி விடுவது, இதர செடி கொடிகளை வளரவிடுவதில்லை என்பது போன்ற காரணங்களால் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை சமயங்களில் நிலத்தில் பிடிமானம் இல்லாத இவ்வகை மரங்கள் குடியிருப்புகள் மீதும், சாலைகளின் குறுக்கேவும் விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஊட்டி அரசு கலை கல்லூரி வளாகத்ைத சுற்றிலும் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் இருந்தன. இவற்றால் வகுப்பறை கட்டிடங்கள் சேதமடையும் அபாயம் இருந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இதற்கு பதிலாக கல்லூரி வளாகத்தில் முதல்வர் அறை அமைந்துள்ள பகுதி மற்றும் கல்லூரி வளாகத்தின் பிற பகுதிகளில் விக்கி, நாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசு கலை கல்லூரி மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு மைதானத்தின் ஓரத்தில் 100க்கும் மேற்பட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெல்ல வளரும் தன்மை கொண்ட இந்த சோலை மரங்கள், அடுத்த 10 ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பலன் தரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள் உள்ளன. இவற்றை பருவமழை துவங்குவதற்கு முன் வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Oothi Government College , 200 oasis saplings were planted at Ooty Government College
× RELATED புயல் வெள்ள பாதிப்புக்கு உதவ ஒரு மாத...