×

சென்னையில் பாஜ பிரமுகர் கொலை ஏன்? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: பாஜ மத்திய சென்னை எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் பாலசந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாலசந்தர் கொலை பின்னணி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30), பாஜ எஸ்சி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் மீது 2 கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நண்பர் கலைவாணனுடன் ஒரு கடையின் அருகே நின்றிருந்தபோது, திடீரென வந்த 3 பேர் பாலசந்தரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பினர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலசந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பாலசந்தர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட பாலசந்தர் இந்து மக்கள் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக இருந்த போது, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அதன் அலுவலகம் முன்பு ‘பசுமாட்டு தலை’ வெட்டி வீசப்பட்டது. விசாரணையில், பாலசந்தர் மத கலவரத்தை உண்டாக்கும் வகையில் ஆட்களை தயார் செய்து பசுமாட்டின் தலையை வீசியது தெரியவந்தது. அவரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த பாலசந்தர், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் அடிதடி உள்ளிட்ட சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். இதனால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ‘சி’ கேட்டகிரி ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பிறகு தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2019ம் ஆண்டு ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கட்சியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஈடுபட்டதால் இந்து மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். ஒன்றிய இணை அமைச்சர் முருகனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மேலும், முன்விரோதத்தால் பாலசந்தருக்கு பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலசந்தர், துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பெற்றார். 2 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பாலசந்தர் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தது. இதனால் தனது டாக்டர் மனைவி ராதிகா மற்றும் 4 வயது மகளுடன் பாலசந்தர் கீழ்ப்பாக்கத்தில் தனியாக வசித்தார். சிந்தாதிரிப்பேட்டை முக்கியம்மன் கோயில் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்படி பெற்றோரை பார்க்க நேற்று முன்தினம் மாலை பாதுகாவலருடன் பைக்கில் சிந்தாதிரிப்பேட்டைக்கு  வந்தார். இதை நோட்டமிட்டுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலையை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் மற்றும் சஞ்சய் ஆகியோர் கூட்டாளியுடன் சேர்ந்து செய்தது தெரியவந்தது.

கொலை செய்த பிரதீப் மற்றும் சஞ்சய் மீது அடிக்கடி பாலசந்தர் தனது கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி புகார் அளித்து வந்தார். பாலசந்தரின் பெரியம்மா மகன்கள் ரூபன் சக்கரவர்த்தி மற்றும் தீபன் சக்கரவர்த்தி சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகின்றனர். சில நாளுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டை மீன் கடையில் மாமூல் கேட்ட வழக்கில் ரவுடி தர்கா மோகனின் மகன் பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க அவரது நண்பர் ஜோதி கணேஷ் என்பவர் மூலம் துணிக்கடை நடத்தி வரும் ரூபன் சக்கரவர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அனுப்பியுள்ளார்.

பிறகு பணம் ஏற்பாடு செய்து கடந்த 20ம் தேதி ரவுடி தர்கா மோகன் மகன் பிரதீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பிரதீப் மற்றும் அவரது சகோதரன் சஞ்சய் ஆகியோர் ரூபன் சக்கரவர்த்தி துணிக்கடைக்கு சென்றுள்ளனர். கடையில் இருந்த அவரது சகோதரன் தீபன் சக்கரவர்த்தியிடம் ‘நாங்கள் மாமூல் பணம் கேட்டு ஆள் அனுப்பினால் பணம் தரமாட்டியா’ என கூறியுள்ளனர். இந்த மாதத்திற்குள் உன் அண்ணன் ரூபன் சக்கரவர்த்தியை கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டியுள்ளனர். இதுபற்றி பாலசந்தரிடம் இருவரும் கூறியுள்ளனர்.

பிறகு பாலசந்தர் தனது பெரியம்மா மகன்கள் இருவரையும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, தர்கா மோகன் மகன்கள் பிரதீப் மற்று சஞ்சய் ஆகியோர் மீது மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்க செய்தார். அதன்படி இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பிரபல ரவுடி தர்கா மோகன் சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் வசந்தா என்பவரின் வீட்டிற்கு மருமகன் தினேஷுடன் சென்று, ‘இந்த வீட்டை நாங்கள் வாங்கிவிட்டோம். உடனே காலி செய்ய வேண்டும்’ என்று மிரட்டி உருட்டுக்கட்டையால் வசந்தாவை அடித்துள்ளனர்.

இதுகுறித்து வசந்தா பாலசந்தரிடம் முறையிட்டுள்ளார். பிறகு பாலசந்தர் ஆதரவுடன் பிரபல ரவுடி தர்கா மோகன் மற்றும் மருமகன் தினேஷ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். பாலசந்தர் அழுத்தம் காரணமாக போலீசார் தர்கா மோகன் (57), அவரது மருமகன் தினேஷ் (எ) தினேஷ்குமார் (35) ஆகியோரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர். இது பிரதீப், சஞ்சய் ஆகியோருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பாலசந்தரை தீர்த்துக்கட்டினால்தான் நாம் ஏரியாவில் பிரச்னை இல்லாமல் வாழமுடியும் என பிரதீப், சஞ்சய் மற்றும் அவரது நண்பர் கலைவாணன் ஆகியோர் முடிவு செய்தனர்.

கடந்த 2 நாட்களாக பாலசந்தர் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்துள்ளனர். பெற்றோரை பார்க்க வந்துவிட்டு திரும்பியபோது பாலசந்தரை அவர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். பிறகு 3 பேரும் பைக்கில் ஸ்ரீபெரும்புதூர் அடுக்க கிளாய் கிராமம் எம்ஜிஆர் தெருவில் உள்ள மைத்துனர் ஒருவர் வீட்டிற்கு ரத்தக்கறையுடன் சென்றுள்ளனர். அங்கு துணி மாற்றிக்கொண்டு பைக்கில் 3 பேரும் தப்பியது தெரிந்தது. இவர்கள் நீதிமன்றத்தில் சரணடையும் முன் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பாலசந்தர், அகில இந்திய இந்து மகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் பிரபல ரவுடி தர்கா மோகன் மகன்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். கோடம்பாக்கம் ஸ்ரீ பெண் விவகாரத்தில் சிக்கியதற்கு பாலசந்தர் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதேபோல் தர்கா மோகன் மகன்களுடனும் பாலசந்தர் நல்ல நட்பில் இருந்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் யார் பெரிய ரவுடி என்பதில் பாலசந்தருடன் பிரதீப் மற்றும் சஞ்சய்க்கு மோதல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* பாதுகாவலரை டீ குடிக்க அனுப்பிய பாலசந்தர்
பாலசந்தர் பைக்கில் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவுக்கு வந்தபோது, தனது மெய் பாதுகாவலரிடம் ‘ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அருகேயுள்ள சாமி நாயக்கன் தெருவுக்கு சென்று வருகிறேன். நீ மங்கபதி நாயக்கன் தெருவில் டீ குடித்து விட்டு காத்திரு.. நான் வந்து விடுகிறேன்.. ஒன்றாக போகலாம்’ என கூறியுள்ளார். இந்த தகவலை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாலகிருஷ்ணன் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். இது உண்மையா என அவரிடம் விசாரிக்கின்றனர்.

* காவலர் சஸ்பெண்ட்
பாஜ பிரமுகர் பாலசந்தர் கொலையின்போது, பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த காரணத்திற்காக காவலர் பாலகிருஷ்ணனை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Tags : BJP ,Chennai , Why BJP leader killed in Chennai? Sensational information during the police investigation
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு