ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவு பயங்கரம் மொட்டை மாடியில் தூங்கிய தந்தை சரமாரி வெட்டி கொலை: மதுவுக்கு அடிமையான மகன் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் வீட்டு மொட்டை மாடியில் தூங்கிய தந்தையை  மதுவுக்கு அடிமையான மகன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர், பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்தவர் ராமு (45). இவர், அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா (40), தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக உள்ளார். மகன் தினேஷ் (20), பத்தாம் வகுப்பு வரை முடித்துள்ளார். திவ்யா (15) என்ற மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில்,  தினேஷ் குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் காணாமல் போனார். ஒரு வருடத்திற்கு முன்பு மேல்மருவத்தூர் கோயிலில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை அங்கிருந்து மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். தினேஷ் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வர,  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்துள்ளனர். அங்கு  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் மீண்டும், மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி அளவில் பாரதி நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், மொட்டை மாடியில் கணவன், மனைவி இருவரும் தூங்க சென்றுள்ளனர். மகள் திவ்யா அருகில் உள்ள அவரது பெரியம்மா வளர்மதி வீட்டில் தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு, தினேஷ் மாடிக்குச் சென்று அவரது அம்மாவிடம் கரண்ட் வந்துவிட்டது, வீட்டில் சென்று தூங்குங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார். அவர் சென்றதும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், ராமுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் ரேணுகாவை கண்டதும் அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து, தினேஷ்  தப்பி விட்டார். படுகாயம் அடைந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராமு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன் தினேஷை போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.

Related Stories: