காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை: என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  பிரிவினைவாத இயக்கத்  தலைவர் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர், தீவிரவாதத்துக்கு நிதி திரட்டி கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். யாசின் மாலிக்  மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீரின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் பல கட்டங்களாக என்ஐஏ விசாரணை செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘யாசின் மாலிக் குற்றவாளி’ என்று கடந்த 19ம் தேதி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு என்ன தண்டனை என்ற விவரம் 25ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, தண்டனை விபரம் குறித்த வாதம் நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்தது.

யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என என்ஐஏ வழக்கறிஞர் வாதாடினார். பின்னர், யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் யாசினுக்கு இரண்டு ஆயுள்  தண்டனைகளும், மேலும் 10 குற்றங்களில் 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10  லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வழக்குகளுக்கு வெவ்வேறு சிறைத் தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் ஏக காலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பை எதிர்த்து யாசின் மாலிக் மேல்முறையீடு செய்வார் என தெரிகிறது.காஷ்மீரில் கடைய டைப்பு:  தீர்ப்பை யொட்டி, டெல்லி, காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.  காஷ்மீரிலும், அவரது வீடு உள்ள பகுதியிலும்  பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அங்கு குவிந்திருந்த யாசின்  ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

‘காந்தி பாதையை பின்பற்றுகிறேன்...’

தண்டனை குறித்த வாதத்தின் போது பேசிய யாசின் மாலிக், ‘‘ஆயுதங்களை கைவிட்ட பின்னர், நான் மகாத்மா காந்தியின் பாதையை பின்பற்றி  வருகிறேன். அப்போது முதல் காஷ்மீரில் வன்முறையற்ற அரசியலை  பின்பற்றுகிறேன்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: