×

நாடு முழுவதும் தினமும் ஆயிரம் மாயமாகும் மலர்கள்.: சிறுமிகள் மாயம் 77% அதிகரிப்பு

* பாலியல், குழந்தை தொழிலாளர்களாக மாறும் சிறுமிகள்
* உபி, மபி, ராஜஸ்தான், டெல்லியில் உயரும் எண்ணிக்கை

உலகளவில் பொருளாதாரத்திலும், கல்வியிலும் போட்டியிடும் இந்தியா, வடமாநிலங்களில் இதற்கான விதை விதைக்கவில்லை என்றே கூறலாம். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி கல்வியை முடிக்காதவர்களே அதிகம். வறுமையும் இங்குதான் அதிகம் உள்ளது. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற எண்ணத்திலே, இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால், இவர்களுக்கு கல்வியின் வலிமையும் தெரிவதில்லை. வறுமையின் பயமும் போவதில்லை.  
 
‘இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்...’ ஆனால், நிலைமையே வேறு. வறுமை, கல்வி பயில வசதியில்லாதது, இடைநிற்றல், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள், இளம்பெண்கள் தவறான பாதையை தேடி செல்கின்றனர். குடும்ப சூழ்நிலையால், குழந்தைகளை காப்பாற்ற இளம்பெண்களும், பெற்றோர்களை காப்பாற்ற சிறுமிகளும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். இளைஞர்களோ புத்தகப் பையை தூக்க வேண்டிய கையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பொட்டலங்களுடன் சுற்றுகின்றனர். பலர் கடத்தல் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அரசு நிர்வாகம்தான். வறுமை, கல்வி இடைநிற்றல், வேலைவாய்ப்பின்மை ஆகியவை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அந்த கடமையை செய்ய தவறியதால், இன்று நாடு முழுவதும் ஏராளமானோர் வீட்டைவிட்டு வெளியேறி மாயமாகின்றனர். இவ்வாறு தினந்தோறும் மாயமாகும் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடுகிறது என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தாயை விட பலமானவர்கள் யாரும் இல்லை என்பார்கள். ஆம், பத்து மாசம் வயிற்றில் கருவை சுமந்து, வலிகளை தாங்கி பெற்றெடுக்கும் குழந்தையின் முகத்தை பார்த்ததும், அந்த தாய் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பல்வேறு இன்னல்களையும், வலிகளையும் தாண்டி பெரிய பெரிய கனவுகளுடன் அந்த குழந்தைகளை பெற்றோர் வளர்க்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட வயதை கடந்தவுடன் அந்த குழந்தைகளை வளர்க்க முடியாமல், வேலைக்கு அனுப்புகின்றனர். குறிப்பாக, வடமாநிலங்களில் குழந்தை தொழிலாளர்களாவும், கொத்தடிமைகளாகவும் ஏராளமான சிறுவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.குடும்பத்தினர் வறுமையை அறிந்து, அவர்களது பெற்றோர்களை மூளைச்சலவை செய்து புரோக்கர்கள் மூலம் அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மற்றும் பெண்கள், வேறு மாநிலத்தில் அடைத்து வைத்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் குடும்பத்தினருக்கு மாதம் மாதமும் அந்த புரோக்கர் கும்பல் சரியாக பணத்தை அனுப்பி விடுகிறது. அவர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள் என்று நினைக்கின்றனர். ஒரு கட்டத்தில் தன்னை அந்த தொழில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் சிறுமிகள், பெண்கள் மீண்டும் சொந்து ஊருக்கு செல்வதை தவிர்த்து அங்கேயே தங்களது வாழ்க்கை ஓட்டுகின்றனர்.

இவ்வாறு மாயமாகும் சிறுமிகள், பெண்கள் குறித்து ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்நிலையங்களில் பதிவு செய்வது இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. காரணம், அதிகளவில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட கூடாது என்று உயரதிகாரிகளிடம் இருந்து வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கும் அரசுகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேல் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறுமிகள் மாயமாகும் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான க்ரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடஇந்தியாவில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் சராசரியாக 29 குழந்தைகளும், ராஜஸ்தானில் 14 குழந்தைகளும் ஒவ்வொரு நாளும் காணாமல் போயுள்ள னர். டெல்லியில் எட்டு காவல் மாவட்டங்களில் ஒரு நாளைக்கு ஐந்து குழந்தைகள் மாயமாகின்றனர்.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காணாமல் போன சிறுமிகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் ஆண் குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகமாக பதிவாகி உள்ளது. 2020ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் 8,751 குழந்தைகளும், ராஜஸ்தானில் 3,179 குழந்தைகளும் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2021ல் மத்தியப் பிரதேசத்தில் 10,648 ஆகவும், ராஜஸ்தானில் 5,354 ஆகவும் அதிகரித்துள்ளன. 11 மாதங்களில் காணாமல் போன சிறுமிகளின் எண்ணிக்கை ஆண் குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட தரவு காட்டுகிறது. இந்தூர், போபால், தார், ஜபல்பூர் மற்றும் ரேவா ஆகிய மாவட்டங்கள் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையில் முதல் ஐந்து மாவட்டங்களில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 24 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உட்பட 29 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் 58 மாவட்டங்களில் இருந்து தினமும் இரண்டு 2 சிறுவர்கள், 4 சிறுமிகள் என 8 பேர் காணாமல் போகின்றனர். 2021ல் மட்டும் உத்தரபிரதேசத்தில் 835 சிறுவர்கள், 2,163 சிறுமிகள் என மொத்தம் 2,998 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகளில் 88.9 சதவீதம் பேர் 12-18 வயதுக்கு உட்பட்டவர்கள். மாயமாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்தில் முதல் ஐந்து மாவட்டங்கள் லக்னோ, மொராதாபாத், கான்பூர் நகர், மீரட் மற்றும் மஹராஜ்கஞ்ச்.
2021ம் ஆண்டில் டெல்லியில் 12-18 வயதுக்கு உட்பட சிறுமிகள் 5 பேர் ஒரு நாளைக்கு காணாமல் போகின்றனர். 2021ல் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை வடகிழக்கு மாவட்டத்திற்கு அதிகமாகவும், தென்கிழக்கு மாவட்டத்திற்கு மிகக் குறைவாகவும் உள்ளது. 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அதிகபட்ச எண்ணிக்கை வடகிழக்கு மாவட்டத்தில் இருந்து காணாமல் போனது. மேற்கு, வடமேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கான தரவு வழங்கப்படவில்லை. ராஜஸ்தானில் 4,468 சிறுமிகள், 886 சிறுவர்கள் என மொத்தம் 5,354 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 12 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 14 குழந்தைகள் காணாமல் போகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட அறிக்கையில் 4 மாநிலங்களில் மாயமாகும் சிறுமிகள் மற்றும் பெண்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் புள்ளி விவரங்களை எடுத்தால் குறைந்தது ஒரு நாளைக்கு ஆயிரம் சிறுமிகள் மாயமாவது உறுதி செய்யப்படும். பல மாநிலங்கள் புள்ளி விவரங்களை தரவே அச்சப்படுகின்றனர். இதனால், சரியான புள்ளி விவரங்களை சேகரிக்க முடிவதில்லை. ஒரு காலத்தில் 4 சுவருக்குள்ளேயே அடைத்து, இந்த வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும், வெளியே தலையை காட்ட கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளுடன் பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால், காலத்தின் கட்டாயத்தாலும் பெண்கள் அதிகளவில் வேலைக்காக வெளியே செல்கின்றனர். இதனால் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் பங்கை உலகம் அறியவும், தலை நிமிர செய்யவும் சிறுமிகள் மாயமாவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.     

பெண்களை பாதுகாக்க நிர்பயா நிதி திட்டம்
2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியை மட்டுமில்லை நாட்டையே உலுக்கிய சம்பவம் நிர்பயா பலாத்கார வழக்கு. தனது ஆண் நண்பருடன் படம் பார்த்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த மருத்துவ மாணவி நிர்பயா, சிறுவன் உட்பட 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடைபெற்ற சிறுமி பலாத்காரம், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த மாணவியின் பாலியில் வன்முறை குற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம் நிர்பயா நிதி திட்டம் ஆகும். ஆனால், பல மாநிலங்கள் நிர்பயா நிதி திட்டத்தை பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கான ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுமையாக பயன்படுத்தவில்லை.

கொலையும், ஆபாச படமும், பணமும்...
* மாயமாகும் சிறுமிகள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். சமீப காலமாக பள்ளி மாணவிகள் அதிகளவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், சிலர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
* சிறுமிகளை குறிவைத்தும் கடத்தும் கும்பல் அவர்களை ஆபாசமாக படமெடுத்து வெளிநாட்டில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். இன்னொரு கும்பல், சிறுமிகளின் உடல் உறுப்புகளை வெளிநாட்டில் விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறது.
* வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக வலைதளங்களில் மூழ்கும் சில சிறுமிகள், வாலிபர்களின் அழகான போட்டோவுக்கு மயங்கி தன் கர்ப்பை இழந்து, இறுதியில் நீதி கேட்டு வீதியில் நிற்கின்றனர்.

ராஜஸ்தானில் 3 ஆண்டில் 5,793 பலாத்கார வழக்குகள்
ராஜஸ்தானில் மாநிலத்தில் சிறுமிகள் மாயமாகும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜன.1 2019ம் ஆண்டு முதல் ஜன.31 2022ம் ஆண்டு வரை 5793 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில், 4,631 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 6,628 கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில், 129 வழக்குகளில் 398 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 சிறப்பு நீதிமன்றங்கள்
குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்து மக்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த கூட்டத் தொடரில் கூறியதாவது: நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரைந்து விசாரிக்க 389 போக்சோ சிறப்பு நீதிமன்றம் உட்பட 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் ‘நிர்பயா நிதி’ மூலம் அமைக்கும் திட்டத்தை 2019ம் அறிவிக்கப்பட்டு, ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டம் ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு வகுக்கப்பட்டது, பின்னர் அது மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ₹1572.86 கோடி செலவாகும்.

ஒன்றிய அரசின் பங்கு ₹971.70 கோடி. இதுவும் நிர்பயா நிதியில் இருந்து ஈடுகட்டப்படும். இதுவரை, 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு ஆகியவை மட்டுமே இத்திட்டத்தில் சேரவில்லை. பிப்ரவரி 2022 வரை 399 இ-போக்சோ நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 712 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. அவர்கள் 81,400 வழக்குகளை தீர்த்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மாயமானவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள்தான். இவர்கள் வீட்டை விட்டு வெளியேற சில காரணங்கள் பின் வருமாறு:
* வீட்டு உதவியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு
* பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது
* வீட்டு வன்முறை, துஷ்பிரயோகம், புறக்கணிப்பு
* கொரோனாவால் குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், குழந்தை தொழிலாளர்கள் தேவை அதிகரிப்பு

2.26 லட்சம் வழக்குகள் நிலுவை
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 2.26 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி மாத இறுதி வரை நிலுவையில் உள்ளன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 2,26,728 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் 5,000 முதல் 10,000 வழக்குகள் உள்ளன.

* 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 26%, ராஜஸ்தானில் 41% அதிகரித்துள்ளது.
* மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 2021ல் காணாமல் போன குழந்தைகளில், 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுமிகள். மத்தியப் பிரதேசத்தில் 8,876 சிறுமிகள் காணவில்லை. ராஜஸ்தானில் 4,468 சிறுமிகள் காணவில்லை.
* காணாமல் போன குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக கணிசமாக உயர்ந்து வருவது கவலைக்குரிய. விஷயம்.
* 2020ம் ஆண்டில் கடத்தப்பட்ட 2,222 குழந்தைகளில், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் (815 அல்லது 36.6 சதவீதம்) ராஜஸ்தானில் உள்ளன.
* உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, 58 மாவட்டங்களுக்கு மட்டுமே தரவு வழங்கப்பட்டது.
* டெல்லியில் அனைத்து காவல் மாவட்டங்களுக்கான தரவுகள் வழங்கப்படவில்லை.
* அரியானாவைப் பொறுத்தவரை, ஆர்டிஐ விண்ணப்பங்களுக்கு எந்த பதிலும் இல்லை.
* காணாமல் போன மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சிறுமிகள் விகிதம் 2016ல் 65 சதவீதத்தில் இருந்து 2020ல் அகில இந்திய அளவில் 77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்கள், மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பெரிய அளவில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். இதனால், அரசும் சட்டரீதியான மாற்றங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கிடைத்ததுதான் இந்த ‘போக்சோ’ சட்டம். போக்சோ சட்டம் முழு விரிவாக்கம்  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012. இந்த போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான தண்டனைகளும் என்னவென்று பார்ப்போம்.

போக்சோ சட்டப் பிரிவு 3, 4: குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதும் குற்றம். இதற்கு குறைந்தபட்சம்  7 ஆண்டு சிறை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை. அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 5, 6: குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தப்பட்சம் 10 ஆண்டு சிறை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் உண்டு.
சட்டப் பிரிவு 7, 8: குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். இதன்படி, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை, அதிகபட்சம் 8 ஆண்டு சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.  
சட்டப் பிரிவு 9, 10: குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள்  குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதமும் உண்டு.
சட்டப் பிரிவு 11, 12: குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
சட்டப் பிரிவு 13, 14: குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு, கொடுப்பது குற்றம். இது, இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  
சட்டப்பிரிவு 18: குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

Tags : Thousands of magical flowers every day across the country .: Girls 77% increase in magic
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...