×

விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்: வனத்துறை அறிவிப்பு

பழநி: விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பெரிய  வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இங்கு வரிப்புலி, சிறுத்தை, யானை,  கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள்  அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை  ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனைத் தடுக்க அகழி  மற்றும் சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள்  வனத்துறையினரால் எடுக்கப்பட்டன.

எனினும், விலங்குகள்  விளைநிலங்களுக்குள் வருவது குறைவதில்லை. பழநி பகுதியில் யானைகள் அடிக்கடி  விளைநிலங்களுக்குள் புகுந்து வந்தன. தற்போது யானைகள் மட்டுமின்றி, மான்,  காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளும் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள்  புகுந்து விடுகின்றன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சுற்றித்திரிந்த வன விலங்குகளை வனப்பகுதிக்குள்  விரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பழநி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விளைநிலங்களுக்குள் விலங்குகள் வராத வகையில் வனப்பகுதியில் ஆங்காங்கு  தண்ணீர் தொட்டிகள், தடுப்பணைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வேட்டை தடுப்பு  காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்தால்  உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வனப்பகுதியை ஒட்டி இருக்கும்  தோட்டத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்களாகவே விரட்ட  முற்பட்டால் இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள்  இதனை உணர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு  கூறினர்.

Tags : Forest Department , Farmland, Wildlife, Forestry
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...