×

ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 20,100 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தகவல்

சென்னை: ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 20,100 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கப்படும் தரமான பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் பொருட்களை சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு சென்றடைய பல்வேறு முனைப்பான செயல்களை செய்துவருகிறது.

காவல்துறை இயக்குநர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, திரு. அபாஷ்குமார், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரிலும், மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை மண்டலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி மேற்பார்வையில், பொதுவிநியோகத் திட்ட அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, ஆந்திர மாநில எல்லையில் ஒட்டி அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில் பல்வேறு வகைகளில் வழிச்சோதனை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் அமையப் பெற்றுள்ள இத்துறையின் அலகுகளின் செயல்பாடுகள் பின்வருமாறு:

மே 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில் மொத்தம் 937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய வழக்குகளில் 12,54,087 குவிண்டால் பொதுவிநியோகத் திட்ட அரிசி கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றுகை செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட அரிசியின் மதிப்பு ரூ. 70,85,591.55- ஆகும்.

மேலும், இக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய 836 குற்றறவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 23 நபர்கள் தடுப்புக் காவல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டதத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில் 544 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, 5809.38 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும், இக்காலகட்டதத்தில் 138 வாகனங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. இக்குற்றங்களில் ஈடுபட்ட 538 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
மே 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில் 514 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, 2930.08 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இக்காலகட்டதத்தில 112 வாகனங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் ஈடுபட்டதாக 366 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இனி வரும் காலங்களிலும் இத்துறையின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் மற்ற மாநிலங்களுக்கு செல்வதையும் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இம்மாநிலத்திற்கு கொண்டு வரப்படுவதையும் தடுப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : AP ,Citizens' Supply Officials Investigation Department , 20,100 quintals of ration rice confiscated in Andhra Pradesh border districts in last 3 years: Civil Supplies Criminal Investigation Department
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...