ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வரை சந்திக்க 100 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாமக்கல் முதியவர்

சென்னை: ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க 100 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாமக்கல் முதியவரால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 75 வயது முதியவர் சைக்கிளில் பங்கேற்க வந்தார். அதற்குள் கூட்டம் முடிந்து முதல்வர் புறப்பட்டு சென்றதால் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மாமுண்டி கிராமத்தை சேர்ந்த அவரது பெயர் பிச்சமுத்து (75).

திமுக தொண்டரான இவர், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அளவுகடந்த பற்று கொண்டவர். சுற்றுவட்டாரத்தில் எங்கு திமுக பொதுக்கூட்டம் நடந்தாலும் சைக்கிளில் கொடியை கட்டி கொண்டு சென்று விடுவார். அதிலும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கூட்டம் என்றால் அதிகாலையிலேயே சென்று பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்தான் நேற்று ஆத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்துக்கு அவர் சைக்கிளிலேயே வந்தார். வெயில் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே நின்று இளைப்பாறி வந்தார். இதனால் குறித்த நேரத்துக்குள் அவரால் பொதுக்கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

மு.க.ஸ்டாலின், கூட்டத்தில் பேசிவிட்டு சென்றபிறகே அவரால் கூட்டம் நடந்த இடத்துக்கு வர முடிந்தது. மு.க.ஸ்டாலினை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் அவர் கண்கலங்கியபடி சாலையோரம் நின்றார். முதல்வரிடம் கொடுப்பதற்காக ஒரு மனுவும் வைத்திருந்தார். மிகவும் ஏழ்மை நிலையில் வசித்துவரும் பிச்சமுத்துவுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி கணவர் கைவிடப்பட்ட நிலையில் பிச்சமுத்துவுடன் வசித்து வருகிறார். இன்னொரு மகள் திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே உள்ளார். பிச்சமுத்துவின் வீட்டிலேயே இருக்கிறார். மகன் ஜெயப்பிரகாஷ் திருமணமாகி தனியாக வசித்து வருவதோடு பிச்சமுத்துவை புறக்கணித்து அடித்து துன்புறுத்தி வருகிறாராம்.

மகனுக்கு பிச்சமுத்து, தனது இடங்களை தானமாக எழுதி கொடுத்த பிறகும் பெற்றோரை கவனிக்காமல் அடித்து துரத்துவதாகவும், இதுபற்றி போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் கூறினார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது செட்டில்மெட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டியும், தனக்கு இருசக்கர வாகனம், நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டு மனுவுடன் வந்ததாக கூறினார். பின்னர் தள்ளாத வயதிலும் சைக்கிள் மிதித்தபடி தனது மாமுண்டி கிராமத்துக்கு புறப்பட்டார். முதல்வரை பார்க்க 100 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே வந்த முதியவரின் செயல் மற்ற திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: