×

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கும் ஊட்டி மரவியல் பூங்கா

ஊட்டி : ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது மரவியல் பூங்கா.நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல மடங்கு அதிகம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது பாதிப்பு குறைந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இந்த சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு செல்கின்றனர். ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் மரவியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்வது மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இங்கு புல் மைதானங்கள், அழகிய மலர்கள் என அழகாக காட்சியளித்த போதிலும், போதிய விளம்பரம் இன்றி இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்வது முற்றிலும் குறைந்தது.

கடந்த ஐந்து நாட்களாக ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்தது. இதனை காண சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். எனினும், இந்த பூங்காவிற்கு ஆயிரம் பேர் கூட செல்லவில்லை. போதிய விளம்பரம் இல்லாததே இப்பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்து காணப்படுகிறது. எனவே, வரும் காலங்களில் இப்பூங்கா குறித்து தோட்டக்கலைத்துறையினர் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பகுதிகளில் மரவியல் பூங்கா குறித்த விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை இங்கு நடத்தி சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ooty Botanical Gardens , Ooty: Despite thousands of tourists visiting Ooty every day, the Archaeological Park remains deserted without tourists.
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஆர்கிட் மலர்கள்