காங்கிரஸில் இருந்து கழண்டுகொண்டார் மூத்த தலைவர் கபில் சிபல்: சமாஜ்வாதி சார்பில் ராஜ்யசபாவுக்கு போட்டி!!

லக்னோ : காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. இதனால், கட்சி தலைமை குறித்து காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டது. மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் அதிருப்தி அணியில் சேர்ந்தனர். இவர்கள் ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இந்த ஜி23 குழுவில் அங்கம் வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல். காங்கிரஸ் கட்சி தலைமை பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் இருப்பதை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் கபில் சிபல்.

இந்த நிலையில், கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் கபில் சிபல் உத்திரப்  பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் கபில் சிபல் தாக்கல் செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து மே 16ல் விலகிவிட்டேன். அன்றே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி விட்டேன். நான் சுதந்திர வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். நான் எப்போதும் நாட்டில் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன். சுதந்திரமாக குரல் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம். மோடி அரசை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்,என்றார்.

Related Stories: