காதல் கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை-திருப்பத்தூர் அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் அருகே காதல் கர்ப்பிணி மனைவி உடல்நலக்குறைவால் இறந்த துக்கத்தில் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரியகரம் அடுத்த சுண்ணாம்புக் கொல்லைப் பகுதியில் வசிப்பவர் பெருமாள். இவரது மகள் சங்கீதாவும் (18) திருப்பத்தூர் குனிச்சி அடுத்த பெரியார் வட்டம் பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மகன் மேகநாதன் (24) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

மேகநாதன் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர்களுடைய  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் பெற்றோர் மாங்குப்பம் அடுத்த நரியநேரி கிராமத்தில் வசிக்கும்  திருப்பதி என்பவருக்கு (24) திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணமான பிறகு 4 மாதங்கள் மட்டுமே திருப்பதியுடன் சங்கீதா வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தன்னுடைய காதலன் மேகநாதனை மறக்க முடியாமல் கணவனை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பெங்களூரு பகுதிக்குச் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து  வந்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பதியின் வீட்டாரும் மேகநாதனின் வீட்டாரும் சமரசம் பேசி வேறு வழி இல்லாமல் சங்கீதாவை மேகநாதனுடன் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கடந்த 6 மாதங்களாக இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சங்கீதாவிற்கு வலிப்பு வந்துள்ளது.

இதனால் அவரது உறவினர்கள் சங்கீதாவை குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

இந்த தகவல் பெங்களூரு பகுதியில் மேஸ்திரி வேலை செய்வதற்காக சென்றிருந்த கணவன் மேகநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இறந்த காதல் மனைவியை மருத்துவமனைக்கு சென்று பார்க்காமலேயே மனைவி இறந்த சோகத்தில் மனம் உடைந்த மேகநாதன்  திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது காதல் மனைவியை இழந்த சோகத்தில் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: