×

புதுகை அருகே நடந்த பயங்கர சம்பவம் தொழிலதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது-62 பவுன் நகை பறிமுதல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 62 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (52). இவர் ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மேலும் இவரது மனைவி ஆயிஷா பீவியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 170 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், ஆய்வு மேற்கொண்டு 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர்.
3 டி.எஸ்.பி.க்கள், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான இந்த தனிப்படை போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது 8 பேர் கும்பல் சிக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த கதிரவன், லோகேஷ், பட்டுக்கோட்டையை சேர்ந்த காந்த், சூரியா, ஜெயப்பிரகாஷ், ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக் முகமது, நாகையை சேர்ந்த முகமது யூனுஸ், உசிலங்காட்டை சேர்ந்த ரித்தீஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த கும்பலிடம் இருந்து கொள்ளைபோன 170 பவுன் நகைகளில், 62 பவுன் நகை, 2 கத்தி, முகக்கவசம், கையுறை 2 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

எஸ்பி பேட்டி

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேற்று மணமேல்குடி காவல் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவுடையார்பட்டினம் தொழிலதிபர் நிஜாம் கொலை சம்பந்தமாக மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் விசாரணையில் நிஜாம் கொலையில் 9 பேர் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக 9 பேரில் 8 பேரை கைது செய்துள்ளனர். இன்னும் ஒரு குற்றவாளி கைது செய்யப்படவில்லை. அவரைத் தேடி வருகிறோம். அவர் கைது செய்யப்பட்ட பிறகு நிஜாம் எதற்காக கொலை செய்யப்பட்டார். நகைக்காகவா, இல்லை தொழில் போட்டிக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும். இதுவரை கொள்ளை போன 175 பவுன் நகையில் அறுபத்தி இரண்டு பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது மீதமுள்ள நகை குறித்து தேடப்படும் குற்றவாளி சிக்கிய பிறகு தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Budugai , Pudukkottai: Eight persons have been arrested in connection with the murder of a businessman near Pudukkottai. 62 pound jewelery confiscated from them
× RELATED புதுகை மாவட்டத்தில் நகர்ப்புற...