×

இறந்த தந்தையின் சடலத்தை வணங்கிவிட்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய மாணவி

கடலூர் : கடலூரில் உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணங்கிவிட்டு சென்று எஸ்எஸ்எல்சி மாணவி பொதுத்தேர்வு எழுதினார்.
கடலூர் அருகே உள்ள சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவரது மகள் அவந்திகா(15). கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடந்து வருவதால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 தேர்வுகளை அவந்திகா எழுதியிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு திருமண நிகழ்ச்சியில், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிவக்குமார் திடீரென உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. மேலும் நேற்று பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வு நடைபெற்றது. தந்தை இறந்த சோகத்தில் இருந்த அவந்திகா, எப்படி தேர்வு எழுதுவது என்று தெரியாமல் இருந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு தைரியம் கொடுத்து தேர்வு எழுத கூறினர். இதையடுத்து மனதை திடப்படுத்திக்கொண்ட அவந்திகா, நேற்று காலை தன் தந்தையின் சடலத்தை வணங்கிவிட்டு, கண்ணீருடன் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார்.

அங்கு சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, தைரியம் அளித்தனர். இதையடுத்து அவந்திகா தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு, மீண்டும் மதியம் வீட்டிற்கு திரும்பினார். சிவக்குமாரின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.

Tags : SSLC , Cuddalore: An SSLC student wrote the general examination after paying homage to the body of his deceased father in Cuddalore.
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...