×

ஜூன் மாதத்தில் மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500ஆக இருக்கும்-வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டாலும் காரிப்பருவத்தில் மட்டும் 85 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 2-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22ம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 32.4 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரித்ததின் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் மக்காச்சோளத்தின் விலை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் 2.56 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோள வரத்தானது ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் மொத்த மக்காச்சோள தேவையில் 30 சதவீதம் பங்களிக்கிறது. பீகாரிலிருந்து ஏற்கனவே வரத்து துவங்கியுள்ளது. இது ஜூலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டிற்கான, கர்நாடகா மக்காச்சோள வரத்தானது ஆகஸ்டில் வரத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குவிண்டாலுக்கு ரூ.2,400 முதல் ரூ.2,500ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் இந்த ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : University of Agriculture , Coimbatore: Tamil Nadu Irrigation Agriculture is functioning in the Center for Agricultural and Rural Development Research at the Tamil Nadu Agricultural University
× RELATED வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி