பாஜகவின் எஸ்சி/எஸ்டி அணி மத்திய சென்னை மாவட்ட தலைவர் வெட்டிக் கொலை: கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தது போலீஸ்..!

சென்னை: பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்துள்ளார். தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் பாஜவிற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, நடிகை குஷ்புவுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பாலசந்தர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் பாஜவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது, பாலசந்தருக்கு பாஜ எஸ்.சி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்ததால் தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காவலர்கள் இல்லாத நேரம் திடீரென மூன்று பேர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கண் இமைக்கும் நேரத்தில் வந்து பாலசந்தரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். உயிர் பிழைக்க அவர் அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். ஆனால் மூன்று பேரும் விடாமல் துரத்தி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதில் பாலசந்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த வழக்கில் கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: