×

திருத்தணி முருகன் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டிக்கெட், கட்டண டிக்கெட் கவுன்டர்கள் தனித்தனியாக உள்ளன. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதால் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வழக்கமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவர்கள் ரூ.150க்கு தரிசன டிக்கெட் வழியாக உள்ளே சென்றுதான் தரிசனம் செய்வார்கள்.

நேற்று காலை பக்தர்களை உள்ளே விட கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோயிலுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், திருத்தணி பகுதியை சேர்ந்த பக்தர் முருகு என்பவர் வாக்குவாதம் செய்ததுடன் கோயில் ஊழியர் புருஷோத்தமன் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த புருஷோத்தமன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் உடனடியாக கோயிலுக்கு வந்து விசாரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* கோயில் நிர்வாகம் விளக்கம்
கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், `தரிசனம் டிக்கெட் வழியாக இலவசமாக அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனால்தான் உள்ளூர் பக்தர்களை அதன் வழியாக விடவில்லை. இலவச தரிசன டிக்கெட் வழியாக செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தரிசனத்துக்கு செல்ல மறுத்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்’ என்று கூறப்பட்டது.

* எம்எல்ஏ சந்திரன் பேச்சுவார்த்தை
 தகவலறிந்த திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பக்தர்களையும் சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்து சென்றார். 


Tags : Thiruthani Murugan Temple , Denial of permission to local devotees at Thiruthani Murugan Temple: Tension due to protest
× RELATED கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 5...