×

இசிஆர் நுழைவாயிலில் 45 அடி உயர ஸ்தூபி: செஸ் ஒலிம்பியாட் வீரர்களை கவர திட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயிலில் 45 அடி உயர ஸ்தூபியை கலை நயத்துடன் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூம்புகார் என்றழைக்கப்படும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், தமிழக கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த செயல்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரம் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், கைவினை கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரூ.5.61 கோடி செலவில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தில், முதல் கட்டமாக ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கி, மாமல்லபுரம் பேரூராட்சியின் ஐந்து ரதம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகளை அழகு படுத்துதல், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் வசிக்கும் 28க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், மழைநீர் செல்லும் கால்வாய், மின்விளக்கு, அலங்கார வளைவு, மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயில் அருகே 45 அடி உயர ஸ்தூபி உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. அதில், ஒரு சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயிலில் 45 அடி உயரம் கொண்ட ஸ்தூபி அமைக்கும் பணியில், தனியார் நிறுவன ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த, ஸ்தூபியில் நான்கு நிலைகள் உள்ளன. தரையில், இருந்து முதல் நிலையில் 4 யானைகள், 2ம் நிலையில் 4 மயில்கள், 3ம் நிலையில் அனைத்து விலங்குகளும் கொண்ட யாழி, 4ம் நிலையில் 4 சிங்கங்கள் என வெளிநாட்டினரை கவரும் விதமாக, கலை நயத்துடன் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து, பூம்புகார் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயிலில் 45 அடி உயர ஸ்தூபி கலைநயத்துடன், வெளிநாட்டினரை கவரும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் 15 நாட்களில் முழுமையாக நிறைவடையும். மாமல்லபுரத்தில், 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை வரவேற்கும் விதமாக, இந்த ஸ்தூபி அமையும். விரைவில் ஸ்தூபி திறக்கப்படும் என்றார்.

Tags : Stubi ,ECR ,Chess Olympiad , 45-foot-tall obelisk at the ECR entrance: a plan to impress Chess Olympiad players
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு