திருப்பூரில் சினிமாவில் வருவதுபோல காதல் தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து: தாயை தாக்கியதால் சகோதரர்கள் ஆவேசம்

திருப்பூர்: திருப்பூரில் காதல் தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. சினிமாவில் வருவதுபோல பட்டப்பகலில் கத்தியுடன் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் செந்தில் (21). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரி (20). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் காதலித்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சக்திவேலிடம் பேச செந்தில், ஹரி இருவரும் அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் சக்திவேலின் தாயார் மட்டும் இருந்தார். அவரை இருவரும் தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த சக்திவேல், தனது அண்ணன் அஜீத்துடன் சேர்ந்து பனியன் துணியை வெட்டும் கத்தியால் செந்தில், ஹரி இருவரையும் தாக்கினார். இதை தடுத்த ராஜ்குமார் (22) என்பவரை இருவரும் விரட்டி, விரட்டி கடுமையாக தாக்கினர். அவர்களின் தாயாரும் மிளகாய் பொடி தூவி தாக்கியுள்ளார். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து வாங்கிய ராஜ்குமார் டூவீலர் கடையில் தஞ்சம் புகுந்தார். கடைக்குள் புகுந்தும் தக்க முயன்றவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். படுகாயம் அடைந்த ராஜ்குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சினிமாவில் வருவதுபோல பட்டப்பகலில் துரத்தி துரத்தி வாலிபரை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: