×

சீனா விசா முறைகேடு விவகாரம் சிபிஐ.யின் குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது: கார்த்தி சிதம்பரம் அறிக்கை

புதுடெல்லி: ‘சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, நகைச்சுவையாக இருக்கிறது,’ என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ப.சிதம்பரம் ஒன்றிய அமைச்சராக இருந்தார். அப்போது, அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியது. மேலும், அவருடைய ஆடிட்டர் பாஸ்கர ராமனையும் கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட வேலை காரணமாக இங்கிலாந்து சென்று விட்டு திட்டமிட்டபடி இந்தியா திரும்புகிறேன். என் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டை சுமத்துவதற்காக ஒன்றிய அரசின் ஆயுதமாக உள்ள புலனாய்வு அமைப்புகளை கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் எனக்கு எந்த பயமும் இல்லை. உயிருடன் இல்லாத ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னையும் இவ்விவகாரத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் சேர்த்துள்ளன. எனது தந்தையை குறிவைத்து, என் மீது சுமத்தப்படும் போலி குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவேன். மேலும், சீனர்களுக்கு விசா வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ, அல்லது டெலிபதியாகவோ நான் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. சிபிஐ குற்றச்சாட்டுகள் நகைச்சுவையாக இருக்கிறது. நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை,’ என கூறி உள்ளார்.

Tags : CBI ,China ,Karthi Chidambaram , CBI's allegation of China visa fraud is a joke: Karthi Chidambaram report
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...