×

பெண் மைய சினிமா - கபடி சாம்பியன்

நன்றி குங்குமம் தோழி

பெரும்பாலும் ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்னும் பின்னுமான புற வாழ்க்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக விளையாட்டுத்துறையில் திருமணமான நிறைய ஆண்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல. அவர்களின் நிலையே வேறு. திருமணமான பிறகு விளையாட்டுத் துறையில் இயங்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அதுவும் குழந்தை பெற்று குடும்பப் பொறுப்பு கூடிய பிறகு விளையாட்டு என்பதே பெண்களின் வாழ்க்கையில் ஒரு கனவாகிவிடும். இப்படி குடும்ப பொறுப்புக்கும் கனவுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட ஒரு கபடி வீராங்கனையின் துணிச்சல் மிக்க கதைதான் ‘பங்கா’. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி வசூலை அள்ளிய இந்திப் படம் இது. விளையாட்டைப் பற்றி சமீபத்தில் வெளியான தரமான படங்களில் இதுவும் ஒன்று.

ஒரு காலத்தில் கபடி விளையாட்டில் யாராலும் நெருங்கமுடியாத ஒரு சாம்பியன் வீராங்கனை ஜெயா. அவளுக்கு விருப்பமானவருடன் திருமணமாகி குழந்தைப் பெற்றதும் ஜெயாவின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுகிறது. ஜெயா யார் என்பது கூட சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. அந்த அளவுக்கு அவரது அடையாளமே காணாமல் போகிறது.

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக சமைப்பது, மகன் ஆதியைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புவது, ரயில்வேயில் எஞ்சினியராக இருக்கும் கணவர் பிரசாந்துக்குத் தேவையான வேலைகளைச் செய்வது என ஜெயாவின் அன்றாட காலைப்பொழுது ஒரே மாதிரியாக நகர்கிறது. அத்துடன் ஜெயாவும் குடும்பத்தை நகர்த்த ரயில்வே துறையில் வேலை செய்கிறார்.

கிடைக்கும் நேரத்தில் அவருடைய எண்ணங்கள் முழுவதும் கபடியைச் சுற்றியே நிறைந்திருக்கிறது. ஆனால், குடும்பத்தைத் தாண்டி அவளால் வேறு எதைப் பற்றியும் பெரிதாக சிந்திக்க முடியவில்லை. சில நாட்கள் வீட்டு வேலைகள் முடிந்து தாமதமாக அலுவலகத்துக்குச் சென்று உயர் அதிகாரியிடம் திட்டு வாங்குகிறாள். இந்நிலையில் கபடியில் அம்மா ஒரு ஜாம்பவான் என்று மகன் ஆதிக்குத்  தெரிய வருகிறது. அன்றிலிருந்து  ஜெயாவின் வாழ்க்கையே மாறுகிறது.

ஆம், மீண்டும் அம்மா கபடி விளையாடி சாம்பியன் ஆக வேண்டும் என்று துடிக்கிறான் ஆதி. இந்தியப் பெண்கள் கபடி அணியில் ஜெயா இடம்பெற வேண்டுமானால் கொல்கத்தாவுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டும். கணவனையும் குழந்தையையும் பிரிந்து, குடும்ப பொறுப்புகளையும் வேலையையும் விட வேண்டும். அத்துடன் அம்மாவான பிறகு கபடியெல்லாம் எதற்கு என்ற சமூகத்தின் விமர்சனங்களையும் சமாளிக்க வேண்டும். தவிர, உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

அதனால் தன் கனவுகளை ஒரு ஓரமாக மூட்டைக்கட்டிவிட்டு எப்பவும் போல ஒரு சாதாரண குடும்ப பெண்ணாகவே வாழ்க்கையைத் தொடர்கிறாள் ஜெயா. ஆனால், மகன் ஆதி அம்மாவை விடுவதாக இல்லை. செரினா வில்லியம்ஸ் கூட அம்மாவான பிறகு டென்னிஸ் விளையாடவில்லையா என்று ஜெயாவை உற்சாகப்படுத்தி கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கிறான். இதற்கு உறுதுணையாக இருக்கிறார் பிரசாந்த்.

பயிற்சிக்குச் சென்றும், ஜெயா தன் மகன் மற்றும் கணவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவளால் விளையாட்டில் ஈடுபட முடியவில்லை. இதுபோக  சக வீராங்கனைகள் ‘அம்மா’ என்று ஜெயாவைக்  கேலி செய்கிறார்கள். ஜெயா துவண்டு வீட்டுக்குத் திரும்பி போய்விடலாம் என்று கூட ஒரு கட்டத்தில் நினைக்கிறாள். இருந்தாலும் கடுமையாக பயிற்சியில் ஈடுபடுகிறாள். நல்ல பயிற்சி எடுத்து இந்தியப் பெண்கள் கபடி அணியில் இடம்பிடிக்கிறாள். ஆனால், கேப்டனுக்கு ஜெயாவின் மீது காழ்ப்புணர்ச்சி. அதனால் ஜெயா போட்டியில் விளையாட முடியாதபடி ஓரங்கட்டப்படுகிறாள். இந்த விளையாட்டு அரசியலையும் தாண்டி ஜெயா எப்படி சாதித்தால் என்பதே திரைக்கதை.

விளையாட்டுக் கனவில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். எந்த வயதிலும் பெண்களால் சாதிக்க முடியும். அதற்கு உடல், மன உறுதியைத் தாண்டி குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியம் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறது இந்தப் படம். ஜெயாவாக கங்கனா ரனாவத் அருமையாக நடித்திருக்கிறார். குடும்ப பெண்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் ஒரு சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வினி திவாரி. இவர் ‘தங்கல்’ படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Female Central Cinema - Kabaddi Champion ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!