குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகை உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேர் 2ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மேலும் 43.96 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.22 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர்.

இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய், தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 87 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி, மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்ளிட்ட டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: