ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்: ஆந்திர-தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

சென்னை:  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழக மக்கள் மற்றும் ஆந்திர மக்களின் நலனுக்காக இரு மாநில அரசுகளும் வழங்கும் ரேஷன் அரிசி இரு மாநில எல்லைகள் வழியாக கர்நாடகாவுக்கு அரிசி கடத்தல் மாபியாக்களால் கடத்தப்பட்டு வருகிறது என்பதை கனத்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் உள்ள கண்காணிப்பு குறைபாடுகளை பயன்படுத்தி பொது வினியோக திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி வருகிறார்கள். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள ரைஸ் மில்களுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கு கடத்தல் அரிசி பாலீஸ் செய்யப்பகிறது. அதன்பிறகு இந்த அரிசி கர்நாடகாவுக்கு கடத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி பாலீஸ் செய்யப்பட்டு கர்நாடகாவில் வௌிச்சந்தையில் கிலோ ₹40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 தமிழகத்திலிருந்து கடத்தப்படும் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல வழிகள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பேர்ணாம்பட்டிருந்து நாயக்கனேரி வழியாக வி.கோடா மண்டலுக்கும், வாணியம்பாடியிலிருந்து தும்பேரி கூட்ரோடு வழியாக அரிமனிபேட்டை பல்லாவுக்கும், திம்மபேட்டை, பெத்தவங்கா, நாயனூறுவுக்கும், கனக நாச்சியம்மன் கோயிலிலிருந்து நாயனூருக்கும், நாட்ராம்பள்ளி காந்திநகரில் இருந்து குட்லமண்டுகுவுக்கும், பச்சூரிலிருந்து மல்லனூருக்கும், வேப்பனபள்ளியிலிருந்து ஓ.என்.கொத்துருவுக்கும் கடத்தப்படுகிறது. எனவே, பொதுவினியோக திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: