மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் அதிக பரப்பளவில் பயிரிட வாய்ப்பு: ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசனத்திற்கான நீரை முன்கூட்டியே, அதாவது ஜூன் 12ம் தேதிக்குப் பதிலாக மே 24ம் தேதியன்று, அதாவது 20 நாட்கள் முன்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார். இதன் மூலம், விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிரிடுவதற்கும், சம்பா சாகுபடிக்கு தயாராவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றாலும், திறந்துவிடும் தண்ணீர் அனைத்தும் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டும் பணிகள், கரைகளை பலப்படுத்தும் பணிகள் ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இன்று திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27ம் தேதியன்று கல்லணையை  வந்தடைய வாய்ப்பு உள்ளது.

இதனால் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் மற்றும் கிளைக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் பாதிக்கும், நீர் வீணாகக்கூடும். எனவே, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: