திருப்பூரில் காதல் பிரச்னையில் 3 வாலிபர்களுக்கு கத்திக்குத்து: பனியன் தொழிலாளி கைது

திருப்பூர்: திருப்பூர் ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (21). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரி(20). இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் என்பவர் காதலித்த பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(22) என்பவர் காதலித்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பாக சக்திவேலிடம் பேச செந்தில், ஹரி இருவரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சக்திவேலின் தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் சக்திவேல் எங்கே என இருவரும் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து சக்திவேலின் தாயாரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த சக்திவேல் பனியன் துணியை வெட்டும் கத்தியை கொண்டு செந்தில், ஹரி இருவரையும் தாக்கியுள்ளார். இதில் இருவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ராஜ்குமார்(22) என்பவர் அதை தடுக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில், ஹரி இருவரும் சக்திவேலிடமிருந்து தப்பி விட்டனர். ராஜ்குமார் சக்திவேலிடம் சிக்கிக் கொண்டார். அவரை சக்திவேல் துரத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் சக்திவேலின் தாயாரும் சேர்ந்து மிளகாய் பொடி தூவி ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் ராஜ்குமாருக்கு, முதுகு, வயிறு என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

சக்திவேலிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராஜ்குமார், அங்கிருந்து ஓடி வந்து அருகில் இருந்த இருசக்கர வாகன கன்சல்டிங் நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தார். விடாமல் துரத்திய சக்திவேல் கடைக்குள் புகுந்து ராஜ்குமாரை தாக்க முயன்றுள்ளார். ஆனால் கடையில் இருந்தவர்கள் தடுத்து, உடனடியாக கடை கதவுகளை மூடியதால் ராஜ்குமார் உயிர் தப்பினார். பட்டப்பகலில் கத்தியுடன் துரத்திச் சென்று 3 பேரை தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு சக்திவேலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: